📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 17, 2026 10:34 AM

கோஸ்டா ரிக்கா மின்னிலக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்தது

கோஸ்டா ரிக்கா மின்னிலக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்தது

சிங்கப்பூர், நியூசிலாந்து, சிலி ஆகிய நாடுகள் இணைந்து தொடங்கிய மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் (DEPA) ஐந்தாவது உறுப்பினராகக் கோஸ்டா ரிக்கா இணைந்துள்ளது.

2021 ஜனவரியில் அமலுக்கு வந்த இந்த உடன்பாடு, மின்னிலக்க வர்த்தகம், பொருளியல் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான முக்கிய விதிமுறைகளை வகுக்கிறது. மின்னிலக்க அடையாளங்கள், எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களில் இது கவனம் செலுத்துகிறது. குறிப்பாகச் சிறிய நிறுவனங்கள் மின்னிலக்க, மின்னணு வணிகத்தில் ஈடுபட இந்த விதிமுறைகள் உதவுகின்றன.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற எதிர்கால முதலீடு, வர்த்தகப் பங்காளித்துவக் கூட்டத்திற்கு இடையே, கோஸ்டா ரிக்காவிடம் இதற்கான சேர்க்கை ஆவணம் வழங்கப்பட்டது.

ஒப்பந்தத்தில் ஏற்கெனவே இணைந்துள்ள நாடுகள் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட கூட்டறிக்கையில், கோஸ்டா ரிக்காவின் சேர்க்கை ஓர் அர்த்தமுள்ள மைல்கல் என்றும் உயர்தர மின்னிலக்க வர்த்தக விதிமுறைகளிலும் ஒத்துழைப்பிலும் உலகளாவிய நிலையில் ஆர்வம் அதிகரிப்பதை இது காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சேர்க்கை இந்த ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கும் இயல்பு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் இணைந்துள்ள கோஸ்டா ரிக்காவை வரவேற்பதாகக் கூறிய சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான கிரேஸ் ஃபூ, அந்நாட்டுடனான மின்னிலக்கப் பொருளியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

மின்னிலக்க வர்த்தகத்தை வலுப்படுத்த அனைத்துப் பங்காளிகளுடனும் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாகக் கோஸ்டா ரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் இண்டியானா டிரெஜோஸ் கூறினார்.

சிலி, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 2020 ஜூனில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2024 மே மாதத்தில் தென்கொரியா இதில் இணைந்தது. 2022 டிசம்பரில் விண்ணப்பித்த கோஸ்டா ரிக்கா, முறையான சட்ட நடைமுறைகள் முடிந்து தற்போது இதில் இணைந்துள்ளது.