கேப்டன் திலக் வர்மாவை விமர்சித்த கருண் நாயர்.. துலீப் டிராபி தொடரில் வாய்ப்பு மறுத்ததால் சர்ச்சை
கேப்டன் திலக் வர்மாவை விமர்சித்த கருண் நாயர்.. துலீப் டிராபி தொடரில் வாய்ப்பு மறுத்ததால் சர்ச்சை
பெங்களூர்: 2026 துலிப் டிராபி இறுதிப் போட்டிக்கான தென் மண்டல அணியில் தனக்கு இடம் வழங்கப்படாதது குறித்து, கர்நாடக வீரர் கருண் நாயர் கேப்டன் திலக் வர்மாவையும் தென் மண்டல நிர்வாகத்தையும் சமூக வலைதளத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். அவரது இந்த கிண்டலான பதிவு இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிழக்கு மண்டலத்திற்கு எதிரான துலீப் டிராபி இறுதிப் போட்டியில் தென் மண்டல அணி ஆடி வருகிறது. இந்தப் போட்டிக்கான தென் மண்டல அணியின் பிளேயிங் லெவனில் கருண் நாயர் சேர்க்கப்படவில்லை. அவர் அரையிறுதிப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை இழந்தார். தனக்கு இடம் கிடைக்காது என்பதை அறிந்ததும், அவர் பெங்களூரு திரும்பி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க முகாமில் பங்கேற்று சத்தீஸ்கர் அணிக்கு எதிராக அதிரடியாகச் சதம் விளாசினார்.
கருண் நாயர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து தென் மண்டல நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. முன்னதாக அரையிறுதி போட்டியின் போது பேசிய கேப்டன் திலக் வர்மா, "கருண் நாயர் மிகவும் துரதிர்ஷ்டசாலி. எதிரணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், மிடில் ஆர்டரில் இடதுகை பேட்டரான இமதேஜாவைத் தேர்வு செய்தோம்" என்று தனது முடிவை ஆதரித்து பேசினார்.
ஆனால், இமதேஜா தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால் இறுதிப் போட்டியில் அவர் நீக்கப்பட்டு, மற்றொரு இடதுகை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கருண் நாயர் நீக்கப்பட்டது "விளக்க முடியாதது" என்று எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதனைப் பகிர்ந்த கருண் நாயர், "விளக்க முடியாதது என்று சொல்வது மிகவும் குறைவான வார்த்தை" எனச் சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
கருண் நாயரை நீக்கிய தென் மண்டல அணி, இறுதிப் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் இஷான் கிஷனின் இரட்டைச் சதத்தால் 708 ரன்களை வாரி வழங்கித் திணறியது. உள்நாட்டுப் போட்டிகளில் ரன்களைக் குவித்து வரும் ஒரு சீனியர் வீரரைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் திலக் வர்மாவின் கேப்டன்சி குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.