📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 03, 2026 12:03 PM

கையை ஆட்டி வைபவை குழந்தை என ட்ரோல் செய்த பாகிஸ்தான் வீரர்.. ஆசிய விளையாட்டு பைனலில் என்ன நடந்தது?

கையை ஆட்டி வைபவை குழந்தை என ட்ரோல் செய்த பாகிஸ்தான் வீரர்.. ஆசிய விளையாட்டு பைனலில் என்ன நடந்தது?

கையை ஆட்டி வைபவை குழந்தை என ட்ரோல் செய்த பாகிஸ்தான் வீரர்.. ஆசிய விளையாட்டு பைனலில் என்ன நடந்தது?

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆண்கள் கிரிக்கெட்டின் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் 15 வயதான இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய பின், பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் சைகை செய்து கிண்டலடித்த சம்பவம் மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸ் நிகழ்வின் போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வதைத் தவிர்த்தனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா களமிறங்கினர். பாகிஸ்தான் அணியில் அறிமுகமான சாத் மசூத் வீசிய 2வது ஓவரில் இந்திய பேட்டர்கள் 24 ரன்களை விளாசித் தள்ளினர். இதற்கு முன் 2012 அகமதாபாத் போட்டியில் சயீத் அஜ்மல் ஓவரில் யுவராஜ் சிங் 3 சிக்சர்கள் உட்பட 22 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், அதை முறியடித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடியாக இவர்கள் சாதனை படைத்தனர்.

குழந்தை என கிண்டலடித்த சைம் அயூப்

அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்திருந்த போது, 3வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் வீசினார். அப்போது வைபவ் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றார். பந்து கிளவுஸில் பட்டு எழும்ப, விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் மார்பில் பட்டு தடுமாறி இறுதியில் கேட்ச் பிடித்தார்.

வைபவ் அவுட் ஆனதும், 15 வயதே ஆன இளம் வீரர் என்பதை நையாண்டி செய்யும் வகையில் வைபவை நோக்கி பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் கைகளை தொட்டில் போல ஆட்டி, 'நீ ஒரு சின்ன குழந்தை' என்பதைப் போல கிண்டலாக கொண்டாடினார். இந்த அநாகரீகமான கேலிச் செய்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன்பின் 3வது வரிசையில் வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்களில் அஹ்மத் தானியல் பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அதிரடியை கைவிடாத இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 3.2 ஓவர்களிலேயே 50 ரன்களை எட்டி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிவேக அரைசத சாதனையை பதிவு செய்து பதிலடி கொடுத்தது.

அடுத்து வந்த 5வது ஓவரில் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த அடுத்தடுத்த கேட்ச்களை அதே சைம் அயூப் தவறவிட்டு சொதப்பினார். கிண்டலடித்த சைம் அயூப் அடுத்தடுத்து கேட்ச்களை தவறவிட்டதை இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்டி கிண்டலடித்து வருகின்றனர்.

பின்னர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.