📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 10, 2026 09:04 AM

ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதது ஏன்?.. ரஜினி விளக்கம்.. அப்போ அது காரணம் இல்லையா?

ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதது ஏன்?.. ரஜினி விளக்கம்.. அப்போ அது காரணம் இல்லையா?

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக இதன் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இதில் ரஜினியுடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா மேனன், மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது.

பெரிய நட்சத்திரங்கள்: இவர்கள் தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். முதன்முறையாக வித்யாவும், ஹிருத்திக்கும் கோலிவுட்டில் என்ட்ரி தருவதால் தியேட்டரில் திருவிழாவுக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது. அக்டோபர் 15ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. எனவே ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன.

ஜெயிலர் 2 சூப்பர் ஷோ: பொதுவாக ரஜினியின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா ரொம்பவே ஃபேமஸ். ஆனால் இந்த முறை ஆடியோ லான்ச் வைக்கவில்லை. அந்த விழாவுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் அனுமதி தரவில்லை என்று ஒருதரப்பினரும், விஜய்யிடம் எல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா என ரஜினியும், கலாநிதியும் முடிவு செய்துதான் ஆடியோ லான்ச்சையே வைக்கவில்லை என்று ஒருதரப்பினரும் சொல்கிறார்கள். அந்த விழாவுக்கு பதில் ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது.

ரஜினி பேச்சு: அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், "வழக்கமாக பெரிய உள் விளையாட்டு அரங்கங்களில் இசை வெளியீட்டு விழாக்களை நடத்துவோம். ஆனால் அதுவே வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாக கருதிய தயாரிப்பு நிறுவனம்தான் விழாவை வித்தியாசமான முறையில் நடத்தலாம் என்று தெரிவித்தது. மேலும் உள் விளையாட்டு அரங்கங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் நீண்ட நேரம் நடப்பதால் ரசிகர்களும் சோர்ந்துவிடுகிறார்கள்.

இந்த ஐடியா: படக்குழுவினரை தனித்தனியாக நேர்காணல் செய்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முடிவு செய்தார்கள். இருப்பினும் ரசிகர்களை நேரில் சந்திக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தக் குறையை நிச்சயம் சரி செய்வேன்" என்றார்.