ஜாதி வேறுபாடுகளை கடந்து மனிதநேயப் பணி; அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று. ஆன்மிக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி, வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர்.
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர். வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.