IND vs WI: பவுலர்கள் பாவம் இல்லையா? ஆடுகளத்தை உடனடியாக மாற்றுங்க.. EX தேர்வுக்குழு தலைவர் கருத்து
IND vs WI: பவுலர்கள் பாவம் இல்லையா? ஆடுகளத்தை உடனடியாக மாற்றுங்க.. EX தேர்வுக்குழு தலைவர் கருத்து
டெல்லி: பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் சமநிலையான ஆடுகளங்களை அமைக்குமாறு பிசிசிஐக்கு முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, கோரிக்கை விடுத்துள்ளார். பேட்டர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் இடையே நியாயமான போட்டி நிலவ வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டி20 தொடரில், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களால் பந்துவீச்சாளர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டனர். இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 249 ரன்கள் குவித்த போதிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி அந்த இலக்கை விரட்டிப் பிடித்தது.
மூன்றாவது போட்டியில் இந்தியா 223 ரன்கள் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணியை 209 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது. நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 247 ரன்கள் குவிக்க, இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய சேத்தன் சர்மா, "ஆடுகள அமைப்பில் சிறிய முன்னேற்றம் தேவைப்படுகிறது. ரசிகர்கள் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பார்க்க விரும்புவது எனக்குத் தெரியும். ஆனால், தயவுசெய்து பந்துவீச்சாளர்கள் மீதும் சற்று கவனம் செலுத்துங்கள். பந்துவீச்சாளர்கள் ரன்களை விட்டுக்கொடுக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவர்கள் மீண்டும் களத்திற்கு வர தயங்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கக்கூடாது" என்று கூறினார்.
"ஒரு ஆரோக்கியமான போட்டி மிகவும் முக்கியமானது. பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமான விக்கெட்டுகள் தேவை. உள்நாட்டு கிரிக்கெட்டில் பிசிசிஐ பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்களை வழங்குவது போல, சர்வதேச கிரிக்கெட்டிலும் அத்தகைய விக்கெட்டுகளை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
"நான் பாரம்பரிய முறையை விரும்புபவன். சிவப்புப் பந்து கிரிக்கெட் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். இப்போது அது பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்பாளர்களின் கையில் உள்ளது. சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் பல பயிற்சியாளர்களை நான் சந்தித்துள்ளேன். அது நல்ல விஷயம். சிறுவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு விளையாட வேண்டும்" என்று அவர் கூறினார்.