IPL 2027: வரும் சீசனில் தோனிக்கு இது தான் சிஎஸ்கே அணியில் பொறுப்பு.. அஸ்வின் கருத்து
IPL 2027: வரும் சீசனில் தோனிக்கு இது தான் சிஎஸ்கே அணியில் பொறுப்பு.. அஸ்வின் கருத்து
மும்பை: IPL 2027-இல் சிஎஸ்கே அணியின் மெண்டராக தோனி செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் ஆகியோருக்கு இடையேயான செயல்பாடு சுவாரசியமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2026 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மோசமான செயல்பாட்டை வெளியேறியதை அடுத்து, நீண்டகால தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களாக சிஎஸ்கே அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற தவறியதால், பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, விக்கெட்டை காயம் காரணமாக 2026 சீசன் முழுவதையும் தவறவிட்ட தோனிக்கு, அடுத்த ஐபிஎல் சீசனின் போது 46 வயதாகவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான சிஎஸ்கே அணியின் தலைமைப் பண்பு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "புதிய பயிற்சியாளர்கள் குழு அமைந்துள்ள நிலையில், தோனி, ஜாகீர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இடையேயான பிணைப்பைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.
தோனி வழிகாட்டியாகச் செயல்படவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, கெய்க்வாட் ஜாகீர் கானுடன் இணைந்து எவ்வாறு செயல்படுகிறார் அல்லது அவர் தோனியிடம் செல்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிளெமிங் குறித்துப் பேசிய அவர், "பிளெமிங் தோனியின் பாணிக்கு ஏற்பத் தன்னை முழுமையாகத் தகவமைத்துக் கொண்டவர். தோனியின் கைகளுக்கு ஏற்ற கையுறையை போல அவர் செயல்பட்டார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய கேப்டனுக்கு ஏற்ப பிளெமிங்கால் மாற முடியவில்லை என்று சிஎஸ்கே முடிவெடுத்தது ஆச்சரியமளிக்கிறது. அணி மற்றும் கேப்டனின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதே பிளெமிங்கின் பாணியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தோனி கேப்டனாகவும், பிளெமிங் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தபோது சிஎஸ்கே அணி 5 ஐபிஎல் பட்டங்களை வென்றது. பின்னர், ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்பாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகப் பொறுப்பேற்றார். சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர்கள் தேர்வில் தோனியின் முடிவே முக்கியப் பங்கு வகிப்பதாக அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜாகீர் கான் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாகீர் கான் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தோனியுடன் இணைந்து விளையாடியவர். மோஹித் சர்மா 2013 முதல் 2015 வரை மற்றும் 2019 சீசனில் தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாடியவர் ஆவார்.
இதுகுறித்து பேசிய அஸ்வின், "புதிய பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தோனியே அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இருப்பினும், பயிற்சியாளர்களை மாற்றுவதன் மூலம் மட்டுமே சிஎஸ்கேவின் அதிர்ஷ்டம் மாறிவிடும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2026 சீசனில் சிஎஸ்கே அணி விளையாடிய 14 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்தது. அதற்கு முந்தைய 2025 சீசனிலும் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.