📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 29, 2026 02:03 AM

எஸ்ஐஆர் பேரழிவு என்பதை ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் கடும் விமர்சனம்

எஸ்ஐஆர் பேரழிவு என்பதை ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் கடும் விமர்சனம்

எஸ்ஐஆர் பேரழிவு என்பதை ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்க அறிக்கை எஸ்ஐஆர் பேரழிவு என்பதை ஒப்புக்கொள்வதாகும் என்றும், நீக்கப்பட்ட மற்றும் அதற்கான ஆபத்தில் உள்ள வாக்காளர்களுக்கான தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகள் இந்த பெரும் வாக்குரிமை பறிப்பை குறைக்க சிறிதும் உதவாது என்றும் காங்கிரஸ் கூறி உள்ளது. தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை, சேதத்தை கட்டுப்படுத்துவதற்கான விரக்தியின் முயற்சி. அது, அனைத்தையும் மூடி மறைக்கிறது, எதையும் வெளிப்படுத்தவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்பணி பேரிடர் என்பதை ஒப்புக் கொள்வதாகவே உள்ளன. நீக்கப்பட்ட அல்லது நீக்கப்படும் அபாயத்தில் உள்ள வாக்காளர்களுக்கான இந்த தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகள், பெருமளவிலான வாக்குரிமை இழப்பைத் தணிக்க உதவாது.

பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ள 5.43 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்கு இனி வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. உண்மையில், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும், நடைமுறையில் இத்தகைய வருகைகள் மிகக் குறைவாகவும், சீரற்ற முறையிலுமே இருந்தன.

நடக்க வாய்ப்பில்லாத 2வது சுற்று வருகைக்கான வாக்குறுதியால் என்ன பயன்? ஒருமுறை மோசமாகச் செய்யப்பட்ட செயல்முறையை மீண்டும் செய்வதன் பின்னணியில் உள்ள காரணம் ஆராயப்பட வேண்டும். எஸ்ஐஆரின் 3 கட்டங்களிலும் சுமார் 14 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க, தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் பதிலாக உள்ளது.

முதலில் மொத்தமாக வாக்களிக்கும் உரிமையைப் பறித்துவிட்டு, பின்னர் வாக்காளர்களைத் தாங்களே மீண்டும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கூறுவதா? பாஜவுக்குச் சாதகமாக விளிம்புநிலை வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இசிஐநெட் மென்பொருளின் முக்கியப் பங்கு, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை அது நீக்கியது மற்றும் தேர்தல் பதிவு அதிகாரிகளின் முடிவுகளைச் சட்டவிரோதமாக மீறியது ஆகியவை மறுக்கப்படவில்லை. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் முன்மொழியப்படவில்லை. அந்த மென்பொருள் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்குகிறது என்பதைச் சான்றளிக்க ஒரு குழுவை அமைக்கத் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.

இது, நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணியில் பயன்படுத்தப்பட்ட பிறகு, அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்த சந்தேகத்தை ஒப்புக்கொள்வதாக அமைகிறது. தேர்தல் பதிவு அதிகாரிகளின் முடிவுகளை மீறி, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க இசிஐநெட் பயன்படுத்தப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இது சட்டவிரோதமானது. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட கோவாவில் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், அதே செயல் மிகப்பரிய அளவில் நடைபெற்ற மேற்கு வங்கத்தின் நிலை என்ன?

இசிஐநெட்டை யார் இயக்குகிறார்கள் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. தேர்தல் ஆணையர்கள் அமைச்சரவைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் அலுவலகப் பணியில் உள்ள ஒரு அதிகாரியின் செயல்பாடு பற்றியது என்றும், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் எந்தவொரு கொள்கை விவகாரத்துடனும் தொடர்பில்லாதது என்று கூறி, தேர்தல் ஆணையம் அந்தக் கடிதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டியுள்ளது.

படிவம் 6ல் செய்யப்பட்ட சட்டவிரோதமான மாற்றம் மறுக்கப்படவில்லை.

அதை நியாயப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பலவீனமான முயற்சி மேலும் பல கேள்விகளையே எழுப்புகிறது. படிவம் 6ல் புதிய உறுதிமொழி ஒன்றைச் சேர்க்க அனுமதித்த மே 27, 2026ம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டு இந்த மாற்றத்தை நியாயப்படுத்த தேர்தல் ஆணையம் முயன்றது. ஆனால், எஸ்ஐஆருக்கு மட்டுமல்லாமல் அனைத்து வாக்காளர்களுக்குமான ஆன்லைன் படிவம் 6லும் ஜூலை மாதத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டதால், அந்த வாதம் செல்லுபடியாகவில்லை.

நியாயமான அடிப்படை இல்லாமல், சட்டரீதியான நடைமுறையிலிருந்து தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக விலகிச் செல்ல முடியாது என்றும் அதே தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. எஸ்ஐஆர் அல்லாத காலகட்டத்தில் பழைய படிவம் 6 வழங்கப்படுகிறது என்பதும் ஏமாற்று வேலை. ஏனெனில், 2024 முதல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணி (எஸ்எஸ்ஆர்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்ஐஆர் அல்லாத வாக்காளர் பட்டியல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.