சாலமன் பாப்பையா
"சாலமன் பாப்பையா" - கடைக்கோடி மனிதனுக்கும் தமிழ் இலக்கியத்தை கொண்டு சேர்த்த 'மாமனிதன்'
இலக்கியம் என்பது பண்டிதர்களுக்கானது மட்டுமல்ல; சாதாரண மக்களும் ரசித்து புரிந்துகொள்ளக்கூடியது என்பதை தனது பேச்சின் மூலம் நிரூபித்தவர் சாலமன் பாப்பையா.
Published : September 11, 2026 at 5:40 PM IST
"அன்பு தாய்மார்களே.. அருமை பெரியோர்களே.." என 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சமூகத்தை தனது பிரத்யேக குரல் மூலம் கட்டிப்போட்டும், நன்னெறிகளை கூறி வழிநடத்தியும் வந்த பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா (வயது 90) இன்று நம்முடன் இல்லை என நினைக்கும் போதே நெஞ்சம் அடைக்கிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எந்த பண்டிகையாக இருந்தாலும், அதனை உற்சாகமாக தொடங்கி வைப்பதே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்தான் என்று கூறினால் அது மிகையாகாது.
ஒவ்வொரு பட்டிமன்ற நிறைவிலும் அறத்தையும், ஒழுக்க நெறியையும் தூக்கிப் பிடிக்கும் வகையிலான அவரது உரையும், இறுதி தீர்ப்பும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கக் கூடியவை. 5 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் தொண்டு ஆற்றிய அறிஞர் சாலமன் பாப்பையா இன்று மறைந்த நிலையில், அவரது இளமைக் காலம் முதலான வாழ்க்கை வரலாற்றை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் சுந்தரம் - பாக்கியம் தம்பதியருக்கு 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தவர் சாலமன் பாப்பையா. 12 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் 9-வது குழந்தையாக பிறந்த இவர், வறுமையான குடும்பச் சூழலில் வளர்ந்தார். அவரது தந்தை நெசவுத் தொழிலிலும், பின்னர் மதுரா கோட்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றினார்.
அமெரிக்கன் கல்லூரியில் படிப்பு
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், அமெரிக்கன் கல்லூரியிலேயே சேர்ந்து பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
நாடகம் மீது தீரா காதல்
கல்லூரிக் காலத்திலேயே பேச்சு மற்றும் நாடகங்களில் தீரா காதல் கொண்டிருந்த சாலமன் பாப்பையா, பின்னர் கல்வித்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். வேலூர் ஊரிஸ் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் தான் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றிய அவர், தமிழ்த்துறைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றார்.
நகைச்சுவையும் சமூக சிந்தனையும்
கடினமான இலக்கியக் கருத்துகளைக் கூட எளிய தமிழிலும், நகைச்சுவை கலந்த நடையிலும் எடுத்துரைத்தார். குடும்ப வாழ்க்கை, கணவன்–மனைவி உறவு, குழந்தைகள், கல்வி, சமூக மாற்றங்கள், இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என மக்கள் இயல்பு வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களை பட்டிமன்றத் தலைப்புகளாக மாற்றியமைத்தார். அவரது பேச்சில் நகைச்சுவையும் இருந்தது; அதே நேரத்தில் சமூகச் சிந்தனையும் நிரம்ப இருந்தது.
பட்டிமன்றத்துக்கு தனி அடையாளம்
இதுதான், சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களுக்கு மிகப்பெரிய மக்கள் வரவேற்பை பெற்றுத் தந்தன. பல ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்கள் மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சாலமன் பாப்பையா, அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து பட்டிமன்றக் கலாசாரத்திற்கு தனி அடையாளத்தை உருவாக்கினார். சாலமன் பாப்பையாவின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு தமிழ் இலக்கியத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்றது ஆகும்.
கடைக்கோடி மக்களுக்கும் தமிழ் இலக்கியம்
திருக்குறள், சங்க இலக்கியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியப் பாடல்களில் உள்ள ஆழமான கருத்துகளை, பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலை நிகழ்ச்சிகளில் திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு விளக்கம் அளித்தார்.
நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம் உள்ளிட்ட பல நூல்களின் கருத்துகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தொலைக்காட்சி வாயிலாக இல்லந்தோறும் தமிழ் இலக்கியத்தை கொண்டு சென்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.
வெள்ளத்திரையிலும் முத்திரை
பட்டிமன்றங்கள் மூலம் சின்னத்திரையில் வந்து மக்களை மகிழ்வித்து வந்த சாலமன் பாப்பையா, ஒருகட்டத்திற்கு மேல் வெள்ளித்திரையிலும் தனது முத்திரையை பதித்தார். இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த சாலமன் பாப்பையா, ரஜினிகாந்தின் 'சிவாஜி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து மக்களின் மனதை கவர்ந்தார்.
கலைமாமணி முதல் பத்மஸ்ரீ வரை
காலம் இருக்கும் வரை
பட்டிமன்றத் துறையில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற முக்கிய ஆளுமையாக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். சாலமன் பாப்பையா மறைந்தாலும், தமிழை பண்டிதர்களின் அறைக்குள் மட்டும் வைத்திருக்காமல், பாமர மக்களின் இல்லங்களுக்குக் கொண்டு சென்றவர் என்ற வகையில் அவரது பங்களிப்பை தமிழ் உலகம் காலம் உள்ள வரை நினைவுக்கூரும்.