📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 18, 2026 02:31 PM

அயலக உதவித்தொகை சர்ச்சை… திருமாவளவன் சொன்னது என்ன?

அயலக உதவித்தொகை சர்ச்சை… திருமாவளவன் சொன்னது என்ன?

அயலக உதவித்தொகை சர்ச்சை… திருமாவளவன் சொன்னது என்ன?

பாரதிதாசன் உதவித்தொகை விவகாரத்தில் தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்றும், மீதமுள்ள தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர் பாரதிதாசன் தொடர்பான விவகாரம் சமீபத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், மாணவரின் உதவித்தொகை தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் பேசியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மாணவர் பாரதிதாசனுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவிதமான உள்நோக்கமும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றும், அவருக்குச் சேர வேண்டிய மீதமுள்ள தொகை விரைவில் வழங்கப்படும் என நம்புவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை :

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு செயலாளர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரிடம் பேசியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும் அதிகாரிகள் தன்னிடம் விளக்கியதாக அவர் கூறினார். இந்த ஆண்டு வெளிநாடுகளில் கல்வி பயிலும் சுமார் 360 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்காக சுமார் ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக திருமாவளவன் குறிப்பிட்டார்.

பாரதிதாசனுக்கு ஏற்கனவே ரூ.12 லட்சம் வழங்கப்பட்டதாக தகவல் :

பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு கல்விக்கான உதவித்தொகையில், பல்கலைக்கழகக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக இதுவரை ரூ.12 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழங்கப்பட வேண்டிய தொகையைப் பெறுவதற்காக சில கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் தேவைப்படுவதாக மாணவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் தன்னிடம் கூறியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேவையான விவரங்கள் கிடைத்தவுடன் மீதமுள்ள தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“எல்லா மாணவர்களுக்கும் ஒரே நடைமுறைதான்” :

இதனிடையே, தனக்கு தேவையான அனைத்து விவரங்களையும் ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டதாகவும், பல்கலைக்கழகத்தின் வாயிலாகவும் ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாரதிதாசன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்த நிலையில், அதுகுறித்தும் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், மற்ற மாணவர்கள் எவ்வாறு உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்து உதவித்தொகையைப் பெறுகிறார்களோ, அதே நடைமுறையைப் பாரதிதாசனும் பின்பற்ற வேண்டும் என்பதே அரசுத் தரப்பின் நிலைப்பாடு என விளக்கியுள்ளார்.

ரூ.12,000 மதிப்பிலான காலணி குறித்த கேள்வி :

மாணவர் பாரதிதாசன் ரூ.12,000 மதிப்பிலான காலணியை வாங்கியதாகக் கூறி வெளியிடப்பட்ட தகவல் தொடர்பாகவும் கேள்வி எழுந்தது.

இதுபோன்ற தகவல் வெளியிடப்படுவது மாணவருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, உதவித்தொகை பெறுவதற்கான நடைமுறைகளில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான ஆவணச் சமர்ப்பிப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைதான் பின்பற்றப்படுவதாக அதிகாரிகள் விளக்கியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“விரைவில் பணம் கிடைக்கும் என நம்புகிறேன்” :

பாரதிதாசனைத் தனிப்பட்ட முறையில் பாதிக்கும் அல்லது வஞ்சிக்கும் நோக்கம் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்த திருமாவளவன், சம்பந்தப்பட்ட துறையுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

மீதமுள்ள உதவித்தொகைக்குத் தேவையான விவரங்கள் தொடர்பான நடவடிக்கைகள் முடிந்த பின்னர், மாணவருக்குப் பணம் விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதனால், பாரதிதாசன் தொடர்பான உதவித்தொகை விவகாரத்தில் அடுத்தகட்டமாக அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படும் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.