அதிநவீன ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு அவசியம்: வோங்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்த கவலைகள் அண்மைய வாரங்களில் அதிகரித்து வரும் நிலையில், அதிநவீன ஏஐ செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை அனைத்துலக அளவில் கண்காணிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 19 நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த முயற்சியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் வரவேற்றுத்துள்ளார்.
அந்த கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான அந்த அழைப்பைச் சிங்கப்பூர் ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்கி, பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கும் அதன் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆற்றலுடன் பயன்படுத்த விரும்புவதாக அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால் அந்த தொழில்நுட்பம் மேலும் ஆற்றல்மிக்கதாக மாறும்போது, அதன் அபாயங்களிலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
“அவை எல்லை தாண்டிய அபாயங்கள் என்பதால் ஆற்றல்மிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்துலக ஒத்துழைப்பு அவசியமாகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“பொதுவான உடன்பாட்டை எட்டுவதற்கும் கூடுதல் நாடுகளை அந்த முயற்சியில் ஈடுபடுத்துவதற்கும் நடைமுறை வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்றும் திரு வோங் தெரிவித்துள்ளார்.
“ஏஐ தொழில்நுட்பம் மகத்தான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தாலும் அது எப்போதும் மனிதக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பின் கீழ்தான் இருக்க வேண்டும்,” என்றும் அவர் தமது பதிவில் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் ஆகியோர் முன்வைத்துள்ள அதிநவீன ஏஐ தொழில்நுட்பக் கூறுகளைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தக் கூட்டு அழைப்பை வரவேற்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.