📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 20, 2026 02:03 PM

Asian Games: பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி.. செமி பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தியது

Asian Games: பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி.. செமி பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தியது

Asian Games: பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி.. செமி பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தியது

நிஷின்: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 மகளிர் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நிஷினில் நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது பதக்கத்தை உறுதி செய்துள்ளது. தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி புயலாக மாறி, வெறும் 49 பந்துகளில் 9 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 19 பந்துகளில் 37 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 33 பந்துகளில் 40 ரன்களும் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

இதையடுத்து 196 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்த அணி 15.4 ஓவர்களில் வெறும் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. வங்கதேச தரப்பில் திலாரா அக்தர் மட்டுமே தாக்குப்பிடித்து 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா 2.4 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், நந்தினி சர்மா 3 விக்கெட்டுகளையும் அள்ளினர். ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இமாலய வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தங்கப் பதக்கத்துக்காக இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மற்றொரு போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்காக பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதுகின்றன.