அஜித்தின் பேரன்பு.. விஜய்க்கு நன்றி சொன்ன ஏகே.. உருகிப்போன அமைச்சர்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய்க்கு நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். விஜய் மீது அஜித்துக்கு இருக்கும் பேரன்பை அது வெளிப்படுத்துவதாக விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அஜித்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
விஜய்யும், அஜித்தும் தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக வலம் வந்தவர்கள். இரண்டு பேரின் ரசிகர்களும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் சோஷியல் மீடியாவில் இந்த மோதல் உருவானது. அந்த மோதலில் விஜய் ரசிகர்கள் அஜித் குறித்து எக்கச்சக்க முறை அநாகரீகமாக பேசியிருக்கிறார்கள். ஒருவழியாக கடந்த சில வருடங்களாகவே இரண்டு பேர் ரசிகர்களின் மோதல் கொஞ்சம் குறைந்திருந்தன.
நன்றி சொன்ன அஜித்: மேலும் விஜய்யும் தமிழ்நாடு முதலமைச்சராகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் அஜித். அந்த அறிக்கையில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
ஆம்ஸ்ட்ராங் சொன்னதில் மாற்றம்: குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் திரு. நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்: "One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports."
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும். நன்றியும் வாழ்த்துகளும்" என தெரிவித்திருந்தார்.
ராஜ்மோகன் நன்றி: இந்நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், " அஜித்குமார் ஆற்றல் மிக்க அற்புதமான அண்ணன். அவர் நன்றி சொல்லியிருக்கிறார். அது அவருடைய பேரன்பு. அந்தத் துறையின் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு. எங்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித்துக்கு நன்றி. மிகப்பெரிய ஐகான் அவர். விளையாட்டு துறையில் தனக்கென தனி பாதையை வகுத்துக்கொண்ட அஜித் அவர்களுக்கு நாங்களும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வெகு விரைவில் அவர் ஆசைபட்டபடி விளையாட்டு துறையில் மட்டுமில்லை எல்லா துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்துவார். அவருடைய வாழ்த்துக்கு நன்றி" என்றார். முன்னதாக விஜய்க்கு அஜித் நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்டதிலிருந்து அவரையும் சிலர் கடுமையாக விமர்சனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.