📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 04, 2026 03:04 AM

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: நல்லிணக்கம் மற்றும் சிங்கப்பூர் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: நல்லிணக்கம் மற்றும் சிங்கப்பூர் அணி

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டுத் திறனை மட்டுமே வெளிப்படுத்தும் களமாக அமையவில்லை.

விளையாட்டு உணர்வின்மூலம் ஆசியக் கண்டத்தின் ஒற்றுமையை உலகிற்குப் பறைசாற்றும் உன்னத நிகழ்வாகவும் அது மிளிர்கிறது. பல்வேறு பண்பாடுகள், மொழிகள், அரசியல் சவால்கள் நிறைந்த நமது கண்டத்தை, விளையாட்டு எனும் பொதுவான மொழி ஒன்றுதிரட்டியுள்ளது. கடுமையான போட்டியும் இருதரப்பு மரியாதையும் இணைந்து இயங்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நோக்கம், புவிசார் அரசியல் பதற்றம் நிறைந்த இக்காலகட்டத்தில் மிக முக்கியமான அரசதந்திர அமைதி வழிமுறையாகச் செயல்படுகிறது. திடலில் இறங்கும் விளையாட்டாளர்கள் தங்களின் புவிசார் எல்லைகளை மறந்து, மனித ஆற்றலையும் உழைப்பையும் அங்கீகரிக்கின்றனர். வரலாற்றுப் பூசல்களைப் புறந்தள்ளி, விளையாட்டின் மீதான ஆர்வம் போட்டியாளர்களை ஒன்றிணைக்கிறது.

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டு வீரர்களின் நற்பண்புகள் இப்போட்டிகளில் மிளிர்கின்றன. களத்தில் கடுமையான போட்டி நிலவினாலும் போட்டியின் முடிவில் ஒருவரையொருவர் தழுவி வாழ்த்துத் தெரிவிக்கும் உயர்ந்த மனப்பான்மையைக் காண முடிகிறது.

சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற முன்னணி நாடுகளின் மூத்த சாதனையாளர்கள், வளர்ந்துவரும் வேறு நாட்டு இளம் வீரர்களுக்குப் பயிற்சி உத்திகளைப் பகிர்வது ஆசியக் கண்டத்தின் விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், பின்தங்கிய நாடு ஒன்று தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றும்போது, அரங்கம் முழுவதிலும் எழும் கரவொலி ஆசியாவின் கூட்டு வெற்றியாகவே கொண்டாடப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக உலக விளையாட்டுத் துறை மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திலேயே இருந்துவந்தது. ஆனால், ஐச்சி-நகோயா 2026 போட்டிகளில் வெளிப்படும் செயல்திறனும் கட்டமைப்பு வளர்ச்சியும் உலக விளையாட்டு அரங்கில் ஆசியாவின் பங்கை மறுவரையறை செய்துள்ளன.

ஆசிய விளையாட்டாளர்களின் மனவுறுதி உலக அளவில் பெருந்திருப்புமுனையை ஏற்படுத்தும். பன்னாட்டுப் போட்டியாளர்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் மோதுவது பகைமையை வளர்க்காது. உண்மையான போட்டி இருதரப்பையும் புதிய உயரத்திற்கு இட்டுச் செல்லும். அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும்.

பல்வேறு நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள், அந்தந்த நாடுகளுக்குள்ளே நிலவிவரும் பிரிவினைகளைப் பின்னுக்குத் தள்ளி நாடு ஒன்றுபட வழிவகுக்கும். பல நாடுகள் பல இன, சமய, மொழிச் சமூகங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளன. அவ்வப்போது ஒரு நாட்டு மக்களிடையே ஏற்படும் நம்பிக்கையின்மையும் விரிசலும் அவர்கள் ஒன்றாக விளையாட்டாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்போது கரைந்து போகின்றன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஐச்சி-நகோயா 2026 விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணியின் எழுச்சி மிக முக்கியமான அம்சமாகும். ஒரு சிறிய தீவு நாடான சிங்கப்பூர், திட்டமிடப்பட்ட விளையாட்டு மேம்பாட்டின் மூலம் உலக அளவில் சாதனை படைக்க முடியும் என்பதை இது மெய்ப்பித்துள்ளது.

நமது தேசிய ஓட்டப்பந்தய நட்சத்திரம் சாந்தி பெரேரா, மகளிர்க்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டதோடு, 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று திடல்தடப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லோ கியன் யூ முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

கலப்புத் தற்காப்புக் கலையில் (எம்எம்ஏ) டிஃபனி தியோ தங்கப் பதக்கத்தையும், நீச்சல் போட்டியில் கான் சிங் ஹுவே மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வாள்வீச்சு, வூஷூ அணிகளும் பதக்கப் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளன.

ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உலகிற்கு முக்கியமான பாடங்களை உணர்த்துகின்றன. அரசியல் வழிகள் அடைபடும் வேளையில், விளையாட்டுப் போட்டிகள் நாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தையும் மரியாதையையும் பேண உதவுகின்றன.

இளையர் விளையாட்டுகளில் செய்யப்படும் நீண்டகால முதலீடு நாட்டின் ஆரோக்கியம், பெருமை, அனைத்துலக நட்பு ஆகியவற்றை வலுப்படுத்தும். நாட்டின் எதிர்காலத் தலைமுறையினர்க்கு வாழ்க்கைக் குறிக்கோளை நிர்ணயிக்கும்.

நகோயாவில் எரியும் ஆசிய விளையாட்டுச் சுடரொளி விளையாட்டு வெற்றியை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, ஒருவரை ஒருவர் ஊக்குவித்து, இணைந்து செயல்படுவதிலேயே உண்மையான வெற்றி இருக்கிறது என்பதையே மீண்டும் நினைவூட்டுகிறது.