பிலிப்பீன்ஸ்
மணிலா: பிலிப்பீன்சையும் சிங்கப்பூரையும் இணைக்கும் கம்பிவடத்தில் ஏற்பட்ட கோளாறு சனிக்கிழமை (அக்டோபர் 3) சரிசெய்யப்பட்டு, இணையச் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்சைத் தளமாகக் கொண்ட ஜப்பானிய தொலைத்தொடர்பு சார்ந்த நிறுவனமான இன்ஃபினிவான் இன்க், அத்தகவலை வெளியிட்டுள்ளது.
பிலிப்பீன்சையும் சிங்கப்பூரையும் இணைக்கும் கடலடிக் கம்பிவடத்தின் பழுதான பகுதி முழுமையாக சரிசெய்யப்பட்டுவிட்டதாக அது தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்தக் கம்பிவடம் செயலிழந்ததால் பிலிப்பீன்சில் உள்ள இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொண்டன.
விட்டுவிட்டு வரும் அல்லது வழக்கத்தை விட மெதுவான இணைய இணைப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் விளக்கியது.
கடலடிக் கம்பிவடச் செயலிழப்பு நாடு தழுவிய சேவைகளைப் பாதித்ததாக பிஎல்டிடி என்னும் பிலிப்பீன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் கூறியது. அதனால், பாதிக்கப்பட்ட பெரும்பாலான தரவுப் போக்குவரத்துகளை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டதாகவும் அது குறிப்பிட்டது. அதேபோல, ‘கன்வர்ஜ் ஐசிடி சொல்யூஷன்ஸ்’ நிறுவனமும் சிங்கப்பூருக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் இணையம் மற்றும் தரவுப் போக்குவரத்தை மற்ற கடலடிக் கம்பிவடங்களின் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டதாகத் தெரிவித்தது.