ஆசிய போட்டி 2026: ஒரே நாளில் 8 பதக்கம்.. டாப் 10 பட்டியலில் நுழைந்த இந்தியா
ஆசிய போட்டி 2026: ஒரே நாளில் 8 பதக்கம்.. டாப் 10 பட்டியலில் நுழைந்த இந்தியா
ஐச்சி-நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் எட்டாவது நாளில் இந்திய வீரர்கள் மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்தியா பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. தற்போது இந்திய அணி 4 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
எட்டாவது நாளில் இந்தியா கபடியில் இரண்டு தங்கம், துப்பாக்கிச் சுடுதல், மாரத்தான் மற்றும் ஆண்களுக்கான குண்டு எறிதல் ஆகியவற்றில் தலா ஒரு வெள்ளிப் பதக்கங்களையும், ஸ்குவாஷ் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 37-34 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. அதேபோல், ஆண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 40-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்களது சாதனைமிக்க 9வது தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.
ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் இந்திய வீரர் சவான் பார்வால் 42.195 கி.மீ தூரத்தை 2 மணிநேரம், 11 நிமிடங்கள், 37 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின் இசிதகா யமஷிதா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணி பிரிவில் திலோத்தமா சென், விதர்சா வினோத் மற்றும் ஆஷி சௌக்சி ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1763 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில், கடந்த இரு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் தூர், இம்முறை குண்டை 20.64 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் இணை, ஹாங்காங்கின் டாங் மிங் ஹாங் மற்றும் லீ கா யீ இணையிடம் போராடித் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.
தடகளத்தில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி சௌத்ரி 53.21 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8வது நாள் முடிவில், 107 தங்கப் பதக்கங்களுடன் சீனா பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா 30 பதக்கங்களுடன் 10வது இடத்தை பிடித்துள்ளது.