"60
"60 - 80 ரன்கள் குறைவா அடிச்சிட்டோம்.. தோல்விக்கு காரணமே..".. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் வருத்தம்
திருவனந்தபுரம்: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், இந்திய ஆடுகளங்களில் 295 ரன்கள் என்பது போதுமானது அல்ல என்றும், தாங்கள் 60 முதல் 80 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதாகவும் கூறினார். தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், மத்திய ஓவர்களில் ரன் குவிக்க முடியாமல் போனதும், தவறவிட்ட கேட்ச்களுமே தோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் சேர்த்தது. ஜஸ்டின் க்ரீவ்ஸ் 101 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 62 ரன்களும் விளாசினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அதிரடி சதம் (139 ரன்கள்) மற்றும் சுப்மன் கில்லின் சதம் (110 ரன்கள்) ஆகியவற்றால் 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோல்விக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், "இந்த போட்டியில் நாங்கள் நிச்சயம் இன்னும் கூடுதலாக ரன்கள் குவித்திருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அருமையான பேட்டிங் ஆடுகளங்களில் விளையாடும் போது, நாம் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், நாங்கள் 60 முதல் 80 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். 290 ரன்கள் போன்ற இலக்கை பந்துவீச்சில் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், களத்தில் எல்லாமே நமக்கு சாதகமாக அமைய வேண்டும்."
"தொடக்க வீரர்கள் எங்களுக்கு மிகச் சிறந்த தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்கள். கடந்த சில தொடர்களாகவே தொடக்க ஜோடியின் ஆட்டத்தை மேம்படுத்த நாங்கள் தீவிரமாக முயற்சி செய்து வந்தோம். அந்த வகையில் எங்கள் தொடக்க வீரர்கள் போட்ட அடித்தளம் அபாரமானது. ஆனால் நடுப்பகுதி ஓவர்களில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் வேகத்தை இழந்தோம். அதனால் கடைசி கட்டத்தில் எங்களால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது."
"போட்டியில் கிடைக்கும் முக்கியமான வாய்ப்புகளை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவே வேறுவிதமாக மாறியிருக்கலாம். அதேபோல் பந்துவீசும் போது சில கேட்ச் வாய்ப்புகளையும் நாங்கள் தவறவிட்டோம். இந்த தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டிகளில் மீண்டு வருவோம்."
"அபார சதம் அடித்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் போட்டியை முழுமையாக முடிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அவரது உடற்தகுதி நிலவரம் குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அவர் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என நம்புகிறோம். இந்தியாவில் எப்போதுமே எனக்கு நல்ல பேட்டிங் ரெக்கார்டு உண்டு. அடுத்த 2 போட்டிகளில் நானும் பேட்டிங்கில் பெரிய ரன்களை குவிக்க வேண்டும்." என்றார் ஷாய் ஹோப்.