118 பவுன் நகை கொள்ளை
பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் தங்க நகையை கொள்ளையடித்த ஸ்ரீவைகுண்டம் இசக்கி பாண்டி, 30, கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவர் ஏலக்காய் மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.இவருடைய மனைவி மதுமிதா (வயது 29), இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து அவ்வபோது எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு லைக்குகள் சும்மா அள்ளி கொண்டு போகுமாம்.
இந்தநிலையில், மதுமிதா தான் வாங்கும் புதிய தங்க நகைகள், வீட்டில் இருக்கும் கட்டுக்கட்டான பணம் மற்றும் தாங்கள் எங்குச் செல்கிறோம் போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து 'ரீல்ஸ்' (Reels) ஆக வெளியிட்டு வந்துள்ளார். கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டும், கட்டுக்கட்டாகப் பணத்தை மெத்தையில் அள்ளிப்போட்டுக்கொண்டும் அவர் ரீல்ஸ் எடுத்துப் பதிவிட்டு வந்துள்ளார்.
இவரது வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த கொள்ளையர்கள், குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டைக் கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 118 பவுன் தங்கம், வைர நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கம் (இதன் மதிப்பு சுமார் ₹1 கோடி) ஆகியவற்றைக்க கொள்ளையடித்துச் சென்றனர்.
வெளியே சென்று இருந்த தம்பதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து கொள்ளையர்களைத் நகைகள், பணத்தை அள்ளி சென்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுமிதாவின் யுடியூப் பாலோயர்ஸ் பற்றிய தகவல்களை தற்போது போலீசார் சேகரித்தனர்.
தற்போது நகையை கொள்ளையடித்த ஸ்ரீவைகுண்டம் இசக்கி பாண்டி, 30, கைது செய்யப்பட்டார்.நகைகளை விற்பனை செய்ய உதவிய முருகன், முருகேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட இசக்கி பாண்டி என்பவரையும், நகைகளை விற்க உதவிய முருகன் மற்றும் முருகேசன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மீண்டும் ரீல்ஸ் - நெட்டிசன்கள் விமர்சனம்:
இதனிடையே, வீட்டில் ₹1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சில தினங்களிலேயே, அந்தப் பெண் யூடியூபர் மீண்டும் லட்சக்கணக்கில் பணத்தைக் காட்டி ரீல்ஸ் வெளியிட்டு வருவது சமூக வலைதளங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
"இவ்வளவு பெரிய திருட்டு நடந்த பிறகும் சிறிதும் கவலையோ, பயமோ இல்லாமல் மீண்டும் பணத்தைக் காட்டி ரீல்ஸ் போடுகிறாரே! இன்னும் பாடம் கற்கவில்லையா?" என்றும், "வியூஸ்களுக்காகவும் விளம்பர உத்திக்காகவும் இப்படிச் செய்கிறாரா?" என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் காரசாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த புதிய வீடியோக்களிலும் அவர் தனது குழந்தையின் மீதும், படுக்கையிலும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி "பண மழையில் குளிப்பது" போன்ற காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். இந்த வினோதமான செயலால் அவரது வீடியோக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 30 லட்சம் (3 மில்லியன்) வியூஸைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 4.50 லட்சமாக உயர்ந்துள்ளது.