வயநாடு நிலச்சரிவு விசாரணை குழு அமைப்பு
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவையும் கேரள அரசு நியமித்துள்ளது.
கேரளாவில் வயநாடு மாவட்டத்தின் கல்லாடியில் உள்ள ஆனக்கம் பொயில் - மேப்பாடி இடையே இரட்டை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. கடந்த 7ம் தேதி அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏழு பேர் பலியாகினர்; ஒருவர் மாயமான நிலையில், அவரை தேடும்பணி நடக்கிறது.
இதற்கிடையே, நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவியும் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இது, மாநில முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் நிலச்சரிவுக்கான காரணத்தை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.