வியட்நாம் படகு விபத்து; வேலூரை சேர்ந்த தொழிலதிபர் உயிரிழப்பு
வியட்நாம் படகு விபத்து; வேலூரை சேர்ந்த தொழிலதிபர் உயிரிழப்பு
வியட்நாமில் நடந்த இந்த கோர விபத்தில் இதுவரை 15 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
Published : July 11, 2026 at 11:01 PM IST
வேலூர்: வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் வினய்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டம், சைதாப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் வினய்குமார் (48). இவர், வேலூர் மெயின் பஜாரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன், பிரபல செல்போன் நிறுவனத்தின் வேலூர் மாவட்ட டிஸ்ட்ரிபியூட்டராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 13 வயது மகளும் உள்ளனர்.
இந்த நிலையிலேயே வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் வினய்குமாரும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளது. வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வினய்குமார், நேற்று காலை தனது மனைவி மற்றும் மகளுடன் செல்போனில் பேசியபோது, மறுநாள் ஊர் திரும்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், நேற்று (ஜூலை 11) மாலை அவர் பயணித்த படகு ஃபூ குவோக் தீவு அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில், வினய்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த தகவல் வினய்குமார் பணியாற்றிய செல்போன் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதன் அடிப்படையிலேயே குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
இந்த துயரச் செய்தியை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும், வினய்குமாரின் பெற்றோரும், சகோதரரும் தற்போது அயர்லாந்தில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 இந்தியர்கள் உயிரிழப்பு
வேலூரைச் சேர்ந்த வினய்குமாரை போலவே இந்த படகு விபத்தில் திருச்சியைச் சேர்ந்த அழகுராஜன், பாலாஜி மற்றும் ஷேக் அப்துல்லா, திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகபிரபு மற்றும் நிர்மல்குமார், தருமபுரியை சேர்ந்த செந்தில் குமார், சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் உள்ளிட்டோரும் இறந்துள்ளனர்.