📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 15, 2026 12:03 AM

விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம்

விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம்

விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம் - கொந்தளித்த தினகரன்

நிர்வாகத் திறனற்ற தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் - டிடிவி தினகரன்

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில், தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியோடு தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் விவசாயப் பெருமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். காவிரியிலிருந்து பெற வேண்டிய நீரை பெற்றுத்தர முடியாத தவெக அரசை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்து தங்களது சொந்த செலவில் பம்பு செட்டுகளை அமைத்து நிலத்தடி நீரின் மூலம் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காமல் வஞ்சித்த அரசால் விதைத்தவர்களின் கண்முன்னே பயிர்கள் கருகும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது.

விவசாயிகளின் தோழன் என்றும், அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுவதாகவும் பிரச்சாரத்தின்போது வாய் முட்டப் புளுகிய தவெக தலைவர் ஜோசப் விஜய், தவெக அரசின் கையாலாகாத் தனத்தால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக கொடுத்த வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான பயிர் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றாமல் மாநிலம் முழுவதும் விவசாயிகளை போராட வைக்கும் தவெக அரசும், அதன் முதலமைச்சரும்தான் விவசாயிகளின் தோழனா? அடுத்த ஜென்மத்திலும் துரோகம் இழைப்பதற்காகத்தான் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறாரா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

எனவே, அரசின் நிர்வாகத் திறமையின்மையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் உடனடியாக தள்ளுபடி செய்திடுவதோடு, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி