📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 14, 2026 04:33 PM

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி - கம்பீர் பேச்சுவார்த்தை கட்.. வலைப்பயிற்சியில் நடந்த சம்பவம்.. பரவும் தகவல்

பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பர்மிங்காமில் நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது, மூத்த வீரர் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்திடம் 0-2 மற்றும் இங்கிலாந்திடம் 0-4 என டி20 தொடர்களைப் பறிகொடுத்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் வெற்றி பெற தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. முதல் ஒருநாள் போட்டிக்கு முன் பர்மிங்காமில் நடைபெற்ற கடைசிப் பயிற்சியின் போது, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மைதானத்தைப் பார்வையிட்டவாறே கேப்டன் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால், அதே நேரத்தில் வலைப்பயிற்சியில் தீவிரமாகப் பேட்டிங் செய்த விராட் கோலியுடன் கம்பீர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தசைநார் காயம் காரணமாக முந்தைய தொடரைத் தவறவிட்ட கோலி, நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்துவிட்டு சிதான்ஷு கோடக்குடன் மட்டுமே ஆலோசனையில் ஈடுபட்டார்.

விராட் கோலி - கம்பீர் இடையே எந்த மோதலும் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனாலும், இருவரும் பேசிக் கொள்ளாதது ரசிகர்களிடையே பல்வேறு வதந்திகளைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, 2027 உலகக் கோப்பைக்கான திட்டமிடலில் விராட் கோலி தனது முதன்மை ஆலோசனைக் குழுவில் இருப்பதாகக் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்திருந்தார்.

விராட் கோலி கேப்டனாக இல்லாவிட்டாலும் மீண்டும் அணியில் ஒரு மூத்த வீரராக தலைமைக் குழுவில் செயல்படத் தொடங்கியுள்ளதாக கில் கூறிய மறுநாளே, கம்பீர் - கோலி இடையே வலைப்பயிற்சியில் எவ்விதப் பேச்சுவார்த்தையும் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வலைப்பயிற்சியில் ஸ்ரேயாஸ் ஐயரைத் தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டனர்.

2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி ஆடுவது கிட்டத்தட்ட உறுதி என்றே பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. ஆனால், உண்மையில் ரோஹித் சர்மா நிலைதான் ஊசலாட்டத்தில் உள்ளது. அவர் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.