விம்பிள்டன் மைதானத்தில் இந்திய தயாரிப்பு.. ஜோகோவிச், அல்காரஸ் பயன்படுத்தும் குஜராத் துண்டுகள்
விம்பிள்டன் மைதானத்தில் இந்திய தயாரிப்பு.. ஜோகோவிச், அல்காரஸ் பயன்படுத்தும் குஜராத் துண்டுகள்
வாபி: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்காரஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் பயன்படுத்தும் புகழ்பெற்ற விம்பிள்டன் துண்டுகள் இந்தியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன என்பது பலரும் அறியாத ஒரு சுவாரஸ்யமான தகவல். விம்பிள்டன் தொடரின் அதிகாரப்பூர்வ அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் துண்டுகள், குஜராத் மாநிலம் வாபியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
'கிறிஸ்டி' என்ற பிரிட்டிஷ் துணி தயாரிப்பு நிறுவனம் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் விம்பிள்டன் தொடருக்கான அதிகாரப்பூர்வ துண்டுகளை தயாரித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தத் துண்டுகள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு வெல்ஸ்பன் லிவிங் லிமிடெட் (Welspun Living Limited) என்ற இந்திய ஜவுளி நிறுவனம் கிறிஸ்டி நிறுவனத்தை வாங்கியது. அதன் பிறகு, இதன் தயாரிப்புப் பணிகள் முழுமையாகக் குஜராத்தில் உள்ள வாபி பகுதிக்கு மாற்றப்பட்டன.
இந்த விம்பிள்டன் துண்டுகளைத் தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கான வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் பணிகள் போட்டி தொடங்குவதற்கு 18 மாதங்களுக்கு முன்பே தொடங்கும். ஒவ்வொரு துண்டும் முழுமையாகத் தயாராக ஒரு வாரம் ஆகிறது.
மேலும், இந்தத் துண்டுகளின் வண்ணங்கள் கூட ஒரு குறிப்பிட்ட விதியின் கீழ் வடிவமைக்கப்படுகின்றன. ஆடவர் பிரிவுக்கான துண்டுகள் எப்போதுமே விம்பிள்டனின் பாரம்பரிய வண்ணங்களான கரும் பச்சை, ஊதா மற்றும் தங்க நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், மகளிர் பிரிவுக்கான துண்டுகளின் வண்ணங்கள் ஆண்டுதோறும் மாற்றப்படும். அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான மகளிர் துண்டுகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதிக உறிஞ்சும் திறன், மென்மை மற்றும் நீண்ட காலம் உழைக்கும் தரத்துடன் கூடிய பிரீமியம் பருத்தி நூலால் இந்தத் துண்டுகள் நெய்யப்படுகின்றன. விம்பிள்டன் போட்டி முடிந்ததும் பல நட்சத்திர வீரர்கள் இந்தத் துண்டுகளை ஒரு நினைவுப் பரிசாகத் தங்களுடன் எடுத்துச் செல்வது வழக்கம். உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் தொடரில் இந்திய தயாரிப்பு முக்கிய பங்கு வகிப்பது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக உள்ளது.