மும்முனை மின்சார தட்டுப்பாடு
மும்முனை மின்சார தட்டுப்பாடு - விலைக்கு தண்ணீரை வாங்கி பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக, கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வாங்கி ஊற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான், மீன்சுருட்டி, கங்கைகொண்ட சோழபுரம், தா.பழூர் மற்றும் சோழமாதேவி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பாசனத்திற்கு மின் மோட்டார்களை முழுமையாக நம்பியுள்ள மேற்கண்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக மும்முனை மின்சாரம் போதிய அளவு வழங்கப்படவில்லை. அதே போல எவ்வித அறிவிப்புமின்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதோடு, குறைந்த மின்னழுத்த பிரச்சனையும் அவ்வப்போது ஏற்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். குறிப்பாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் மோட்டார்களின் காயில்கள், வயர்கள் மற்றும் சுவிட்சுகள் அடிக்கடி கருகி பழுதாகி விடுவதாகவும், இதனால் தங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே போதிய தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்களைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக பல சிறு-குறு விவசாயிகள் தங்களின் சொந்த செலவில் வாடகை டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதனால் தங்களுக்கு பல மடங்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n