வசனம் பேசுனா பத்தாது; செயல்படணும்! மதுராந்தகத்தில் பழனிசாமி காட்டம்
மதுராந்தகம்:''மதுராந்தகம் எப்போதும் அ.தி.மு.க., கோட்டைதான், சினிமா வசனம் பேசுனா மட்டும் பத்தாது; செயல்பட வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி பேசினார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொது செயலர் பழனிசாமி, எல்.எண்டத்துார், ராமாபுரம், எலப்பாக்கம் மற்றும் ஒரத்தி பகுதிகளில், நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது, பழனிசாமி பேசியதாவது:
த.வெ.க., ஆட்சி அமைந்ததில் இருந்து, 250 கொலை, 300 பாலியல் சீண்டல் சம்பவங்கள் நடந்துள்ளன. இருதினங்களுக்கு முன் வண்டலுார் அருகே, 10ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு, பள்ளி வளாகத்திலேயே மர்ம நபர்கள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.
மாணவியின் பெற்றோர் போராடியும், போலீஸ் மவுனம் காக்கிறது. முதல்வர் விஜய் வசனம் பேசினால் மட்டும் போதாது; செயல்பவ வேண்டும்; நடவடிக்கை எடுக்க வேண்டும். த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க வந்தது தான் இந்த இடைத்தேர்தல்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது தான், செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. 'ரீல்ஸ், ரீல்' தான் இந்த ஆட்சியின் மூலதனம். தமிழகத்தில் போதை கலாசாரம் உயர்ந்து, சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. காவல் துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை,
'ஜனநாயகன்' படம் வந்தது, ஒரு வாரம் கூட ஓடவில்லை. அது, ' டப்பா' படம். லண்டன் பயணம் சென்றார்; புகைப்படம் மட்டும் தான் வந்தது.
இந்த இடைத்தேர்தல், திணிக்கப்பட்ட தேர்தல். கடந்த ஏப்., மாதம் நடந்த பொதுத்தேர்தலில், இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர், ஓட்டு போட்ட மக்களையும் மறந்து விட்டார்; வெற்றிக்க பாடுபட்ட நிர்வாகி, தொண்டர்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகி, தொண்டர்களையும் மறந்து விட்டார்.
அவர், குதிரை பேரத்தின் மூலமாக விலை பேசப்பட்டு, மாற்றுக்கட்சிக்கு சென்றுவிட்டார். அவர்தான் இந்த தொகுதியில, நம் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மதுராந்தகம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை இந்த இடைத்தேர்தலில் நிரூபித்து காட்டுவோம்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.