வானூர் அடுத்த பெரும்பாக்கத்தில் கிரஷர் குவாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு
வானூர் அடுத்த பெரும்பாக்கத்தில் கிரஷர் குவாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு
*கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா-போலீசார் பேச்சுவார்த்தை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள கிரஷர்குவாரிகளால் உடல்நிலை பாதிப்பதாக கூறியும், அதனை மூடக்கோரியும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது.
அப்போது வானூர் தாலுகா பெரும்பாக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் செயல்படும் கிரஷர்குவாரிகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனுஅளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதனைதொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் இயங்கிவரும் கிரஷர்குவாரிகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு
வருகின்றனர்.
சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்களில் கனிமங்கள் அதிகளவில் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது.இதுகுறித்து ஆட்சியர், கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுஅளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எஸ்பி அலுவலகத்தில் புகார்அளித்தபோது அனைத்து சுற்றுவட்டார பகுதிகளிலும் தடைபேனர்கள் வைக்கப்பட்டு அதனை மீறி லாரிகள் இயக்கப்படுகிறது. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கிரஷர் மற்றும் சங்க உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரஷர்குவாரிகளை தடை செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சிறுநீரகபாதிப்பு, நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* கனரக வாகனங்களில் கனிமங்கள் அதிகளவில் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.