உலக சாம்பியன்ஷிப் தேர்வு போட்டியில் வினேஷ் போகத்திற்கு அனுமதி மறுப்பு.. டெல்லி ஐகோர்ட் உத்தரவு
உலக சாம்பியன்ஷிப் தேர்வு போட்டியில் வினேஷ் போகத்திற்கு அனுமதி மறுப்பு.. டெல்லி ஐகோர்ட் உத்தரவு
டெல்லி: 2026-ம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க அனுமதி கோரி நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் சர்வதேச களத்திற்கு மீண்டும் திரும்ப முயன்ற வினேஷ் போகத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 1 வரை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 14 அன்று நடைபெற உள்ளன.
கடந்த 2025 ஜூலை மாதம் தாயான வினேஷ் போகத், மகப்பேறு விடுப்பில் இருந்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனம் நிர்ணயித்த தகுதிப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இதனால் தேர்வுப் போட்டியில் பங்கேற்க தமக்கு சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மகப்பேறு முடிந்து திரும்பும் வீராங்கனைகளுக்கான வெளிப்படையான கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் முறையிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, வினேஷ் போகத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்திய மல்யுத்த சம்மேளனம் வகுத்த தகுதி விதிகள் அனைத்து வீரர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்றும், ஒரு தனிநபருக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்க முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேரடி தகுதி கோராமல், தேர்வுப் போட்டியில் பங்கேற்க மட்டுமே அனுமதி கேட்டதாக வினேஷ் போகத் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் செப்டம்பர் 14 அன்று நடைபெறும் தேர்வு போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மகப்பேறு விடுப்புக்குப் பிறகு களமிறங்கும் பெண் விளையாட்டு வீரர்களுக்கான கொள்கை குறித்த அவரது பிரதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.