Mandaadi Day 1 Box Office
சென்னை: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மண்டாடி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அதன் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் தெரியவந்திருக்கிறது.
காமெடியனாக இருந்த சூரி; கடந்த சில வருடங்களாக ஹீரோவாக மாறியிருக்கிறார். கடைசியாக நடித்த மாமன் திரைப்படம் ஹிட்டானாலும், ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிட்டது. சூழல் இப்படி இருக்க இப்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதில் சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மிதுன், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நேற்று படம் ரிலீஸ்: இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல், டீசர், ட்ரெய்லர் வந்தபோதே படத்தில் சூரியின் உழைப்பு அனைவரையும் ஈர்த்தது. மண்டாடி பாடலுக்கு அவரது தீ பறக்கும் நடனமும் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிற வைத்தது என்றே சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஹைப்போடு நேற்று தியேட்டர்களில் படமானது வெளியானது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படம் ரிலீஸாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கிறது படம்?: எதிர்பார்த்தபடியே படத்தில் சூரி சூரத்தனமான உழைப்பை கொட்டியிருக்கிறார். இதுவரை கோலிவுட்டில் பேசாத பாய்மர படகு போட்டியை அடிப்படையாக வைத்து படமானது உருவாகியிருக்கிறது. படத்தின் பலமாக சூரி மிளிர்கிறார். படத்துடைய முதல் ஃப்ரேமிலிருந்து இறுதி ஃப்ரேம்வரை தன்னுடைய அசாத்திய நடிப்பாலும், உடல்மொழியாலும், ஆக்ஷன் காட்சியாலும் அனைவரையும் கண் கொட்டாமல் பார்க்க வைத்துவிட்டார்.
சூரிக்கு வாழ்நாள் படம் இது: இந்தப் படம் சூரிக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படமாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் டூப் போடாமல் கலக்கியிருக்கும் சூரி; இந்தப் படத்தின் மூலம் முழு ஆக்ஷன் மற்றும் மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார் என்றே தோன்றுகிறது. சூரி மட்டுமின்றி அவருடன் நடித்த மற்றவர்களும் கதையின் வலிமையை புரிந்துகொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கனகச்சிதமாக செய்துவிட்டார்கள்.
இசை பெரிய பலம்: இயக்குநர் மற்றும் ஆர்ட்டிஸ்ட்டுகள் தங்களது அசுரத்தனமான உழைப்பால் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றார்கள். அவர்களுக்கு உறுதுணையாக ஜிவி பிரகாஷும் இருந்தார். படத்தின் ரீ ரெக்கார்டிங் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. முதல் காட்சி முடிவிலிருந்தே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
மண்டாடி வசூல் எவ்வளவு?: அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, முதல் நாளான நேற்று நான்கு கோடியே 75 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் இந்த வசூலை செய்த அப்படம் உலகம் முழுவதும் செய்த வசூலை சேர்த்தால் மொத்தம் ஆறு கோடியே 55 லட்சம் ரூபாயை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்திருப்பதால் இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.