உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்: ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின்
புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனை அதிபர் விளாடிமிர் புதின் வரவேற்றுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டின் போது ரஷ்ய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இதுவரை எந்தப்பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மோடி, ஜி ஜின்பிங் உக்ரைன் போரை நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாநாட்டின் முதல் நாளில் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் புதின் ஆகிய மூவரும் கைகோர்த்து நின்ற காட்சி, உலக அரங்கில் அவர்களின் நெருக்கமான உறவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அதிபர் ட்ரம்ப், சமீபத்தில் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். அதற்கு முன்னதாக அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வரும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முக்கியமான பாலமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
வரும் டிசம்பர் மாதம் மியாமியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்றால், தானும் அதில் கலந்து கொண்டு அவரை நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நடைபெற்றால், போர் தொடங்கிய பிறகு இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் நேர்முக சந்திப்பாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.