📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 24, 2026 12:05 AM

தவெக நிர்வாகி தற்கொலை: மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்

தவெக நிர்வாகி தற்கொலை: மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்

ராமேஸ்வரம்,

தமிழக வெற்றிக் கழகத்தின் வார்டு செயலாளர் பரந்தாமன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர் மீது குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 38). தமிழக வெற்றிக் கழகத்தின் வார்டு செயலாளரான இவர், நேற்று தனது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பரந்தாமனின் மனைவி ஜோதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவரின் உயிரிழப்புக்கு தவெக மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலாதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்

சாலை மறியல்

இந்த நிலையில், ஜெயபாலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரந்தாமனின் மனைவி மற்றும் உறவினர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நடவடிக்கை எடுக்கும்வரை பரந்தாமனின் உடலை மருத்துவமனையில் இருந்து வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்த அவர்கள், ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ராமேஸ்வரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பரந்தாமனின் மனைவி அளித்த புகார் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.