📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 01, 2026 03:03 PM

'தூய சக்தி என்று சொல்லி இன்று திருட்டு சக்தியாக மாறியிருக்கிறது'

'தூய சக்தி என்று சொல்லி இன்று திருட்டு சக்தியாக மாறியிருக்கிறது'

'தூய சக்தி என்று சொல்லி இன்று திருட்டு சக்தியாக மாறியிருக்கிறது' - த.வெ.கவை கடுமையாக விமர்சித்த கனிமொழி

நான்கு மாதங்களில் குற்றச் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை, கொலைகள், லாக் அப் மரணங்கள், ஆணவக் கொலைகள் என்பதுதான் தவெக ஆட்சியினுடைய சாதனை என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.

Published : October 1, 2026 at 10:26 AM IST

செங்கல்பட்டு: தூய சக்தி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னவர்கள், இன்று திருட்டு சக்தியாக மாறியிருக்கிறார்கள் என த.வெ.க-வை திமுக எம்.பி கனிமொழி கடுமையாக விமர்சித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தனித் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக மகளிரணி சார்பில் கருங்குழிப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்த இடைத்தேர்தல் உண்மையில் தேவையான ஒன்றுதானா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து ஒரு ஆட்சி பொறுப்பிற்கு வந்திருக்கிறது. அது அவர்களுக்கும் புரியவில்லை, நமக்கும் இன்னும் தெளிவாகப் புரியவில்லை. அதற்குள்ளாகவே மற்றொரு புதிய இடைத்தேர்தல் ஏன் நடக்கிறது. ஏனெனில், நாங்கள் தூய சக்தி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன ஒருவர், இன்று திருட்டுச் சக்தியாக மாறிவிட்டார்.

அந்தத் திருட்டுச் சக்தி என்ன செய்தது. எந்தக் கட்சியை முடிந்துபோன சக்தி, தேவையற்ற சக்தி, தூரத்தில் இருக்க வேண்டிய சக்தி என்று விமர்சித்ததோ, அங்கேயே சென்று இரண்டு பேரைக் கவர்ந்து இழுத்துக்கொண்டு வந்து இன்று இடைத்தேர்தலை உருவாக்கியிருக்கிறது.

தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் இடைத்தேர்தல் நடக்க வேண்டிய ஒரு அவசியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதுதானா ஒரு தூய சக்தியின் வேலை. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் பிரித்து எடுத்துச் சென்று ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. அத்துடன் விட்டிருக்கலாம். ஆனால், அந்தத் திருட்டுச் சக்தி வேட்பாளர்களைத் திருடி, மக்கள் பிரதிநிதிகளைத் திருடி இன்று இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்தார்.

விஜய் ப்ரோ எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை

தொடர்ந்து பேசிய அவர், “நான் முதலமைச்சரை அதிகமாக விமர்சிக்க முடியாது. ஏனெனில், அவர் நமக்கு சொந்தமாகிவிட்டார். ஏனெனில், அவர் எங்களுடைய அண்ணனை மை டியர் அங்கிள் என்று அன்பாக அழைக்கிறார். அதனால் நானும் அவரை அன்புத் தம்பி விஜய் என்று அழைக்கலாம் என்று இருக்கிறேன். இல்லையென்றால் அவருக்குப் புரிகிற பாஷையில் ப்ரோ, ஸ்வீட் ப்ரோ என்று அழைக்கலாம் என இருக்கிறேன்” என்றார்.

மேலும், “கடந்த செப்.25ஆம் தேதி வண்டலூர் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்று மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் வரும் வழியில் ஒரு அசம்பாவிதம் குறித்து வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, அந்த குழந்தையின் மீதே பழி போடுகிறார்கள். அந்த குழந்தை பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வுக்குப் பயந்துகொண்டு பொய் சொல்கிறது என்று சொல்லக்கூடிய ஒரு கொடூரமான ஆட்சிதான் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி.

குற்றங்களே தவெக ஆட்சியின் சாதனை

நான்கு மாதங்களில் 500க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள், 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பாலியல் வன்கொடுமைகள், 200க்கும் மேற்பட்ட கொலைகள், 8 லாக் அப் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் என இதுதான் இந்த தவெக ஆட்சியினுடைய சாதனை. அதுமட்டுமின்றி, இன்று ஒரே நாளில் ஒன்பது குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

ஆனால், இன்று தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிகமாக இருப்பது ஒரே ஒரு விஷயத்தில்தான். அது விலைவாசி உயர்வு, தேசிய சராசரி 4.4%. தமிழ்நாட்டின் சராசரி 5.44% ஆக உயர்ந்துள்ளது.

இதைவிடப் பெரிய சாதனை என்னவென்றால், உங்களுக்கெல்லாம் 100 யூனிட் இலவச மின்சாரம் என்றார்கள். இப்போது மின்சாரமே இல்லை, அப்புறம் எங்கே இலவச மின்சாரம் கொடுப்பது.

சுறா என்று ஒரு திரைப்படத்தில் விஜய் நடித்தார். அனைவரும் அவரை மீனவர், மீனவர்களின் நண்பர், மீனவர்களுக்காகப் போராடுவார் என்றார்கள். இப்போது பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் குடியிருக்கக்கூடிய இடத்தில் சென்று புதிய சட்டமன்றத்தைக் கட்டுகிறாராம். இந்த ஆட்சி எங்களைக் கொன்று புதைத்தால் கூட பரவாயில்லை, நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம் என்று அங்கிருக்கும் மீனவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறினார்.

தொடர்ந்து, ”தமிழ்நாட்டின் சுயமரியாதை, கல்வி உரிமை, நிதி உரிமை மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து தடையின்றி செயல்பட வேண்டும். மக்களிடம் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளையும், தேர்தல் நேரத்தில் மட்டும் விளம்பர அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகளையும் மக்கள் அடையாளம் காண வேண்டும். மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து எடுத்துரைக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.