சிங்கப்பூர் மலேசியா விநியோகத் தொடர் ஒத்துழைப்பு
சிங்கப்பூரும் மலேசியாவும் இருநாட்டு விநியோகத் தொடர் ஒத்துழைப்புப் பணிக்குழுவிற்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விநியோகத் தொடர் இடையூறுகளுக்கான தயார்நிலையை வலுப்படுத்துதில் அது கவனம் செலுத்தும் என்று சிங்கப்பூரின் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரின் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சுக்கும் மலேசியாவின் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சுக்கும் இடையில் மூன்றாவது முறை நடைபெற்ற வருடாந்தர அமைச்சர்நிலை கலந்துரையாடலில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கோலாலம்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் மலேசியாவின் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் ஜோஹாரி அப்துல் கானியும் இருவரும் இணைந்து நடத்தினர்.
கடுமையான விநியோகத் தடைகள் ஏற்படும்போது, அத்தியாவசியப் பொருள்களும் ஊழியர்களும் எல்லை தாண்டிய தடையற்ற இயக்கத்தை எளிதாக்குவதற்கான நடைமுறை ஏற்பாடுகளை ஆராயவும், வழக்கமான தகவல் பரிமாற்றம், கூட்டுத் திட்டமிடலை ஆதரிக்கவும், நெருக்கடி நேர ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் பணிக்குழு செயல்படும் என்று சிங்கப்பூர் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு சொன்னது.
அது, சிங்கப்பூர், மலேசியா, ஆகிய இரு நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்கள், கொள்கைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றும் அமைந்திருக்கும்.
வேகமாக உருமாறி சிக்கலாகிவரும் அனைத்துலகப் பொருளியல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விநியோகத் தொடர் மீள்திறனை வலுப்படுத்துவதில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறுதியை விநியோகத் தொடர் ஒத்துழைப்புப் பணிக்குழு எடுத்துக்காட்டுவதாக இருதரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.
ஒத்துழைப்பை வலுப்படுத்தி, திறனைக் கட்டியெழுப்பி, ஹலால் தொடர்பான துறைகளில் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை சிங்கப்பூரும் மலேசியாவும் ஆராய ஒப்புக்கொண்டுள்ளன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஹலால் பொருள்களை மலேசியா ஏற்றுமதி செய்யும் இரண்டாம் ஆகப் பெரிய நாடு சிங்கப்பூர். கடந்த ஆண்டு 7.1 ரிங்கிட் பில்லியன் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மலேசியாவின் நன்கு வேரூன்றியுள்ள ஹலால் துறையும், சிங்கப்பூரின் விரிவான அனைத்துலக வணிகக் கட்டமைப்புகள், நிதித் திறன்கள், ஆராய்ச்சி, மேம்பாட்டு நிபுணத்துவம் ஆகியவையும் இணைந்து அதிக மதிப்புள்ள வணிகப் பங்காளித்துவத்தையும் முதலீடுகளையும் உருவாக்க முடியும் என்பதை இருநாட்டுத் தலைவர்களும் மேற்கோள்காட்டினர்.
ஹலால் சான்றிதழை இருதரப்பும் அங்கீகரிப்பது குறித்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தகளை இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், ஹலால் சான்றிதழ் பெற்ற வணிகத்தை எளிதாக்கவும் இரு நாடுகளின் வணிகங்கள், பயனீட்டாளர் நலனுக்காக அதிக வணிக வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் அதிகாரபூர்வ ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளை ஆராய இருதரப்பையும் அவர்கள் ஊக்குவித்தனர்.