📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 27, 2026 10:00 PM

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி... திமுக நிர்வாகி கைது..!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி... திமுக நிர்வாகி கைது..!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி... திமுக நிர்வாகி கைது..!

சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பள்ளி அங்கீகாரம், தர உயர்வு மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட திமுக நிர்வாகி பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் Federation of Associations of Private School in Tamil Nadu அமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, திட்ட அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பதிவு செய்யப்படாத "தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த பி.டி. அரசகுமார், தனது அரசியல் மற்றும் அதிகாரத் தொடர்புகளை பயன்படுத்தி அனுமதிகள் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, DTCP மற்றும் CMDA அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ ஒப்புதல்களை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பெருமளவில் பணம் வசூலித்ததாகவும், ஆனால் உறுதியளித்தபடி அனுமதிகளை பெற்றுத் தராததோடு பணத்தையும் திருப்பி வழங்காமல் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் பி.சி. தேன்மொழியின் அறிவுறுத்தலின்படி, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-III) உதவி ஆணையாளர் வி.இ. செந்தில் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணை நடத்தியது.

இதையடுத்து, வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பி.டி. அரசகுமார் (59), சாலிகிராமம் பகுதியில் இன்று (ஜூன் 27, 2026) கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.