📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 27, 2026 11:02 PM

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு?

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு?

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, இன்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, இன்னும் முடிவு செய்யவில்லை என்று மட்டும் பதில் அளித்தார். போட்டியிடவில்லை என்று மறுக்கவில்லை.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக களம் இறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, தற்போது பொது வேட்பாளராக சீமானை போட்டியிட வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, சீமான் 2016 சட்டசபை தேர்தலில் கடலூர் தொகுதியிலும், 2021 சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். தற்போது, காரைக்குடி தொகுதியில் அவர் அடைந்த தோல்வியின் மூலம் ஹாட்ரிக் தோல்வியை அவர் சந்தித்தார். தற்போது, பொது வேட்பாளராக அம்பாசமுத்திரம் தொகுதியில் அவர் நிறுத்தப்பட்டால், வெற்றி கிட்டுமா?, கள நிலவரம் எப்படி மாறப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.