தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் விசாரணைக்கு நேரில் ஆஜர்
தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் விசாரணைக்கு நேரில் ஆஜர்
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மோசடி புகார் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published : September 18, 2026 at 1:31 PM IST
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக இளங்கோவன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் பி.டி. அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அரசகுமார் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 16ஆம் தேதி சென்னை, திருச்சி உட்பட அவருக்கும், அவருடன் தொடர்புடையவர்களுக்கும் சொந்தமான 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்ட வழக்குத் தொடர்பான 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ்கள், ஹார்டு டிஸ்க் பொருத்தப்பட்ட 2 மேசைக் கணினிகள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஆப்பிள் ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பணப் பரிவர்த்தனைகள், வங்கி விவரங்கள், காசோலைகள், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் பதிவாகியுள்ள தகவல்கள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அன்பில் மகேஸ் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிருந்தனர். அதன் அடிப்படையிலேயே அவர் இன்று (செப்.18) விசாரணைக்கு ஆஜராகினார். சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆதாரங்கள் மற்றும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்க காவல்துறையினர் தயார் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகின.
மேலும், அவரின் பதில்களை எழுத்துப்பூர்வமாகவும், விசாரணை நடவடிக்கைகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு ஆதாரங்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.