📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 18, 2026 09:33 PM

இருளில் தவிக்கும் தமிழகம்; தொடரும் மின்வெட்டு புகார்கள்: அதிகரிக்கும் மின் தேவை; காற்றாலை உற்பத்தி சரிவு

இருளில் தவிக்கும் தமிழகம்; தொடரும் மின்வெட்டு புகார்கள்: அதிகரிக்கும் மின் தேவை; காற்றாலை உற்பத்தி சரிவு

இருளில் தவிக்கும் தமிழகம்; தொடரும் மின்வெட்டு புகார்கள்: அதிகரிக்கும் மின் தேவை; காற்றாலை உற்பத்தி சரிவு

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என மின்துறை அமைச்சர் தொடர்ந்து விளக்கம் அளித்து வரும் நிலையில், சென்னை முதல் திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளூர், விழுப்புரம் என பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை, குறைந்த மின்னழுத்தம், திடீர் மின்தடை உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒருபுறம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின்வாரியம் கூறி வரும் நிலையில், மறுபுறம் மின்தடையால் உற்பத்தி பாதிப்பு, விவசாயப் பணிகள் பாதிப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் என புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் மின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், ஜூலை மாதத்திலும் மின் தேவை தொடர்ந்து உயர்ந்தது. நடப்பு செப்டம்பர் மாதத்திலும் மின் பயன்பாடு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியிலும் சரிவு ஏற்பட்டது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்பான புகார்கள் அதிகரித்தன. இதற்கு விளக்கம் அளித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், பின்னர் நிலைமை சீரடைந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளதால், சமீபத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ.20 செலவாகியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கு முன்பு கோடை மற்றும் உச்ச நேரங்களில் ஒரு யூனிட்டுக்கு ரூ.22 அல்லது அதற்கு மேல் விலையும் கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதாகவும் கூடுதல் தேவையை சமாளிக்க மேலும் 1,500 மெகாவாட் மின்சாரத்தை குறுகியகால அடிப்படையில் கொள்முதல் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சென்னையின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் மின்னழுத்தம் ஏற்ற இறக்கமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மின்வெட்டு ஏற்படும்போது புகார் தெரிவிக்க வேண்டிய மின்னகம் அழைப்பு மையத்தையே தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், மயிலாப்பூர் 230 கிலோவோல்ட் துணை மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டு 10 நிமிடங்களுக்குள் மின்சாரம் சீராகவில்லை என்றால், அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மின்னகம் அழைப்பு மையமும் செயலிழக்கும் நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்னகத்தில் உள்ள மின்சார காப்பு வசதி சுமார் 10 நிமிடங்களுக்கு மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய அமைப்பே மின்தடையால் பாதிக்கப்படும் நிலை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளிலும் தினமும் 3 முதல் 4 முறை மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிரமப்படுவதாகவும், வீட்டு உபயோக மின் சாதனங்கள் மின்னழுத்த ஏற்ற இறக்கத்தால் பழுதடைவதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் புகார்கள் குறுகிய நேர மின்தடை என்ற அளவில் மட்டும் இல்லை. இரவு நேரங்களில் நீண்ட நேர மின்தடை, அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு, குறைந்த மின்னழுத்தம், மின்னழுத்த ஏற்ற இறக்கம், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி இழப்பு என பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மின்னகம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாக அமைச்சரே தெரிவித்துள்ளார். பொதுமக்கள், தொழில்துறையினர், விவசாயிகள் சந்திக்கும் பாதிப்புகளுக்கு உடனடி தீர்வு என்ன என்பது கேள்வியாக உள்ளது. அதிகரிக்கும் மின் தேவையை முன்கூட்டியே கணித்து மின்சாரத்தை ஏற்பாடு செய்வது, மின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மின்மாற்றி மற்றும் விநியோகக் கட்டமைப்பில் உள்ள பிரச்னைகளை விரைவாக சரிசெய்வது, மின்னகம் புகார்களை தடையின்றி பெறுவது ஆகியவை அரசின் முன் உள்ள முக்கிய சவால்களாக உள்ளன.

மின்தடை இல்லை என்ற அதிகாரப்பூர்வ விளக்கத்துக்கும், மின்தடை தொடர்பாக தினந்தோறும் குவியும் புகார்களுக்கும் இடையே உள்ள இந்த முரண்பாட்டுக்கு அரசு தெளிவான கணக்கை வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.