📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 04, 2026 10:00 AM

தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! விரிவான தகவல்!

தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! விரிவான தகவல்!

தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! விரிவான தகவல்!

கடலோர மாவட்டங்களில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம் என கணிப்பு.

தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன், வடகிழக்குப் பருவமழை தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

வடகிழக்கு பருவமழையில் இந்தாண்டு பெருவறட்சியா? பெருவெள்ளமா?

”சூப்பர் எல் நினோ தாக்கத்தினால் குறைவான தென்மேற்கு பருவமழை, அக்டோபர் வரை நீடிக்கும் கோடை வெப்பம், நீர் நிலைகள் வறண்டு வறட்சியின் பிடியில் இருக்கும் தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்கள் வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

‘‘இந்தாண்டு தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப் பொழிவு ஏற்படலாம்…’’ எல்-நினோவால் வறட்சிதான் நிலவுமெனப் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். ஆனால், எல்-நினோ உலகளவில் 70 சதவீதம் வறட்சியையும், 30 சதவீதம் அதித மழைப்பொழிவையும் கொடுக்கக்கூடியது. தற்போது தமிழகத்தில் வறட்சி நிலையையும், வெய்யிலின் தாக்கத்தையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலை அக்டோபர் முதல் வாரத்திலிருந்து படிப்படியாகக் குறையும். அதன்பிறகு அக்டோபர் 15 முதல் வடகிழக்குப் பருவமழை காலக்கட்டத்தில் இயல்பைவிட மிக அதிக மழைப்பொழிவு தமிழகத்தில் பதிவாகும்.

தமிழகத்தில் எல்நினோ மூன்று கட்டத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே, முதல் கட்ட தாக்கத்தால் இயல்புக்குக் குறைவான தென்மேற்குப் பருவமழை, அதனால் நீர்நிலைகளில் போதுமான நீர் இருப்பு இல்லாத நிலை, நீடித்த கோடை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இது அக்டோபர் வரை இருக்கும்.

இதன்பிறகு அக். 15 முதல் கிழக்கு காற்று வருகை தந்து அக்டோபர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை இரண்டாம் கட்டம் தாக்கம் நிகழும். அது, இப்போது இருந்ததற்கு அப்படியே நேரெதிராக இருக்கும். அதாவது நல்ல மழைப்பொழிவைக் கொடுக்கும். குறிப்பாக இயல்பைவிட கூடுதலான மழையையும், குறுகிய நேரத்தில் அதீத கனமழையையும் ஏற்படுத்தும்.

மூன்றாம் கட்ட தாக்கம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை நீடிக்கும். இதில்தான் வெப்ப அலை, வெப்பநிலை அதிகரிப்பு எல்லாம் இருக்கும்.

தற்போது மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கிழக்கு பசிபிக் பெருங்கடலில் 5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இந்த வெப்பநிலை வரக்கூடிய நாட்களில் மேலும் அதிகரிக்கும்.

அதனால், உலகம் இதுவரை பார்த்திராத ஒரு தீவிரமான சூப்பர் எல்-நினோ இந்த ஆண்டு நவம்பர் மாதம் உருவாகி அடுத்த 2027-ம் ஆண்டு ஜனவரி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில், கிழக்கு இந்திய பெருங்கடலில் இயல்புக்குக் குறைவான வெப்பநிலையும், மேற்கு இந்திய பெருங்கடலில் இயல்புக்கு அதிகமான வெப்பநிலையும் பதிவாகி வருகிறது.

இதனை, ‘பாசிட்டிவ் ஐஓடி’ என வகைப்படுத்துவோம். இந்தப் பாசிட்டிவ் ஐஓடி கடந்த மூன்று வாரங்களாக 0.65 டிகிரியாக இருந்து தற்போது 0.71 , 0.75 டிகிரி செல்சியஸாக மாறியுள்ளது. இது நவம்பர் துவக்கத்தில் 1.2 டிகிரியாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

இதனால், கடல் சார்ந்த அலைவுகள் இந்தியப் பெருங்கடலுக்கு சாதகமாக அமையும். இது ஒரே இடத்தில் நிலையான அலைவாக மாறி மழைப்பொழிவை கொடுக்கும். குறிப்பாக இயல்புக்கு அதிகமான ஈரப்பதமும், காற்று குவிதலும் உருவாகி குறுகிய நேரத்தில் அதீத கனமழையை உருவாக்கும்.

பொதுவாகவே தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் போன்றவை உருவாகி மழைப்பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டும் இதேபோலவே நிகழும்.

குறிப்பாக இந்த ஆண்டு வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் தலா ஒரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்தப் புயல் அதிக மழைப்பொழிவை கொடுக்கக்கூடியதாக இருக்கும், காற்று சேதத்தை ஏற்படுத்தாது. அடுத்தடுத்து காற்று சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் போன்ற வலுகுறைந்த சலனங்கள் உருவாகும். இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சாதகமாக அமையும்.

அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இயல்பாகவே தமிழகம் 440 மி.மீ. மழைப்பொழிவை பெற வேண்டும். ஆனால், இந்த ஆண்டு சுமார் 500 முதல் 600 மி.மீ. மேல் மழைப்பொழிவை பெறும் வாய்ப்பிருக்கிறது.

இதில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என எல்லாமே நல்ல மழைப்பொழிவைப் பெறவுள்ளன.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி , திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாக மழைப்பொழிவு பதிவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Private weather analyst Hemachandran has predicted the possibility of 500 mm of rainfall occurring along the Tamil Nadu coast in a single day.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.