📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 29, 2026 08:03 PM

தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனால் வெளிச்சம் பெற்ற போல் வால்ட்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் நெகிழ்ச்சி

தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனால் வெளிச்சம் பெற்ற போல் வால்ட்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் நெகிழ்ச்சி

தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனால் வெளிச்சம் பெற்ற போல் வால்ட்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் நெகிழ்ச்சி

நகோயா: ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 29 வயதான பரணிகா இளங்கோவனின் வெற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. உலகளவில் முதன்மையாகக் கருதப்படும் விளையாட்டுத் தொடர்களான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என எதிலுமே இதுவரை இந்திய ஆடவர் அல்லது மகளிர் போல்வால்ட் வீரர்கள் பதக்கம் வென்றதில்லை. அந்த நீண்டகால ஏக்கத்தை தகர்த்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை பரணிகா இளங்கோவன் படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக அறிமுகமான பரணிகா இளங்கோவன், 4.15 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாகத் தாண்டி, கஜகஸ்தானின் பாலினாவுடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தப் பிரிவில் ஜப்பானின் மிசாகி மொரோடா 4.55 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தையும், சீனாவின் நையு சுங்கே 4.50 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

தொடக்கத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி வந்த பரணிகாவை, அவரது பயிற்சியாளர் மில்பர் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் தான் போல்வால்ட் தடகளப் பிரிவிற்கு அழைத்து வந்து தேசிய அளவிலான வீராங்கனையாக உருவாக்கினார். இதுகுறித்து சாய் (SAI - Sports Authority of India) ஊடகத்திடம் பரணிகா இளங்கோவன் பேசியதாவது: "நான் தற்செயலாகத்தான் போல்வால்ட் விளையாட்டுக்குள் வந்தேன். என்னை இந்த உச்ச நிலைக்கு கொண்டு வந்தது எனது பயிற்சியாளர் ரஸ்ஸல் தான். நான் இங்கு பதக்கம் வெல்வேன் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எனது தனிநபர் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தான் களமிறங்கினேன். ஆனால் பதக்க மேடையிலேயே ஏறிவிட்டேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் போல் வால்ட் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. இதற்காக எனது குழுவிற்கும் எனது குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

முன்னதாக 4.23 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்திருந்த பரணிகாவின் சாதனையை, ஜி.சிந்துஸ்ரீ கணேஷா 4.25 மீட்டர் தாண்டி முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பரணிகாவின் இந்த அசாத்திய சாதனை, அவரது நீண்டகால பயிற்சியாளரான மில்பர் பெர்ட்ரான்ட் ரஸ்ஸலுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்ஸல் பேசுகையில், "என்னை பொறுத்தவரை இந்த வெண்கலப் பதக்கம் என்பது ஒரு முடிவு அல்ல. இது பரணிகாவின் விளையாட்டு வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கம். நாங்கள் நகோயாவிற்கு மிகவும் எதார்த்தமான திட்டமிடலுடன் தான் வந்தோம். இங்கு போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதும், ஒவ்வொரு வீராங்கனையும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். பதக்கத்தைப் பற்றி மட்டுமே யோசித்து அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாமல், ஒவ்வொரு உயரத்தையும் படிப்படியாக தாண்ட வேண்டும் என்ற நடைமுறையில் மட்டுமே கவனம் செலுத்தினர். பரணிகாவிடம் பதக்கத்திற்காகப் போராடும் அசாத்திய திறமை உள்ளது என்பதை நாங்கள் முழுமையாக நம்பினோம். ஆனால் அதேநேரத்தில், போட்டி நாளில் அதை களத்தில் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். பரணிகா தனது அபாரமான போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி இறுதியில் பதக்கத்தை வென்றுக் காட்டினார்.

பரணிகாவின் அடுத்த இலக்கு என்பது, அவரது தனிநபர் சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து உயர்த்தி 4.40 முதல் 4.50 மீட்டர் வரை தாண்டுவதுதான். அதையும் கடந்து சர்வதேச அளவிலான பெரிய போட்டிகளில் அவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, உலக அரங்கில் தனது நிலையை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்."

இந்திய தடகளத்தில் ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகியவற்றின் நிழலிலேயே மறைந்திருந்த போல்வால்ட் விளையாட்டுக்கு, பரணிகாவின் இந்த பதக்கம் புதிய வெளிச்சத்தை தந்துள்ளது என்று ரஸ்ஸல் சுட்டிக்காட்டினார். "சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படத் தொடங்கும் போதுதான், அந்த விளையாட்டை மக்கள் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். பரணிகா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றிருப்பது, பல இளம் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் போல்வால்ட் விளையாட்டை ஆர்வத்துடன் தேர்வு செய்ய பெரிய உந்துதலாக அமையும். இந்திய தடகள சம்மேளனமும் அரசும் போல்வால்ட் துறைக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்." என்று ரஸ்ஸல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. இளம் வீரர்கள் தொடர்ந்து முன்னேற நமக்கு இன்னும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள், தரமான உபகரணங்கள், முறையான பயிற்சிகள் மற்றும் அதிக போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. பரணிகாவை இன்னும் பலசாலியாக மாற்ற வேண்டும். அவர் ஓடி வந்து பாய்ந்து எழும் வேகத்திலும் திறனிலும் அதிக நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும். அவரது வேகம் மற்றும் உடல் வலிமையை மேலும் பலப்படுத்த வேண்டும். அதோடு சர்வதேச அளவிலான பெரிய போட்டிகளில் பங்கேற்கும் அனுபவமும் அவருக்கு அதிகம் தேவைப்படுகிறது" என்றார்.

இந்திய தடகள வரலாற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலுக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது போல, தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் வென்றுள்ள இந்த வரலாற்று வெண்கலப் பதக்கம், இந்திய போல்வால்ட் விளையாட்டுக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.