📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 29, 2026 07:03 PM

24 ஆண்டு கால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி.. ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற பூஜா

24 ஆண்டு கால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி.. ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற பூஜா

24 ஆண்டு கால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி.. ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற பூஜா

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா 1.84 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு மகளிர் உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா தொடக்கம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 1.84 மீட்டர் உயரம் வரையிலான அனைத்து உயரங்களையும் எந்தவித தவறுகளும் இன்றி முதல் வாய்ப்பிலேயே வெற்றிகரமாகத் தாண்டி அசத்தினார்.

அடுத்ததாக நிர்ணயிக்கப்பட்ட 1.87 மீட்டர் உயரத்தை மூன்று வாய்ப்புகளிலும் அவரால் தாண்ட முடியவில்லை. இதனால் 1.84 மீட்டர் தூரத்துடன் பூஜா 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். பூஜாவின் தனிநபர் சிறந்த உயரம் 1.93 மீட்டராகும்.

இந்தப் பிரிவில் 1.87 மீட்டர் உயரத்தைத் தாண்டிய உஸ்பெகிஸ்தான் வீராங்கனை சைஃபுல்லேவா தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தான் வீராங்கனை ஓவ்சின்னிகோவா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை பாபி அலோசியஸ் மகளிர் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

அதன்பின்னர் கடந்த 24 ஆண்டுகளாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் எவருமே உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றதில்லை. அந்த நீண்டகால இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெண்கலப் பதக்கம் வென்று இந்திய தடகள வரலாற்றில் பூஜா புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளார்.