📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 10, 2026 05:30 PM

தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த அதர்வா, கவின்!

தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த அதர்வா, கவின்!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரங்களான நடிகர்கள் அதர்வா, கவின் ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து முதலமைச்சரைச் சந்தித்து வருவது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய டிரெண்டாக மாறியுள்ளது.

'இதயம் முரளி' ரிலீசுக்கு முந்தைய நாள் முதல்வரை சந்தித்த அதர்வா..

நடிகர் அதர்வா முரளி நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தையநாளான நேற்று, தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து நடிகர் அதர்வா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர் எப்போதும் நமது சொந்த 'விஜய் அண்ணா' தான். எனது வாழ்வின் இந்த முக்கிய நாளுக்கு முன்பாக, அவரிடமிருந்து அன்பையும் ஆசியையும் பெற்றது எனக்கு உலகத்தையே வென்றது போன்ற உணர்வைத் தருகிறது. மிக்க நன்றி அண்ணா! இந்த சந்திப்பால் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயுள்ளேன். மிகுந்த நன்றியுடனும், அசுரத்தனமான நேர்மறை ஆற்றலுடனும் இருக்கிறேன்" என மிகவும் எமோஷனலாகப் பதிவிட்டுள்ளார்.

It was an honour and truly a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu. To me, he’ll always be our very own Vijay Anna.To receive his love and blessings right before the BIG DAY means the world to me. Thank you, Anna. 🤍A special thank you to @Jagadishbliss… pic.twitter.com/oF33Ci1DzA

"திரையில் பார்த்தவர் இன்று முதலமைச்சர்" - நெகிழ்ந்த நடிகர் கவின்..

அதர்வாவைத் தொடர்ந்து, கோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நாயகன் 'நட்புனா என்னானு தெரியுமா' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ' டாடா, லிஃப்ட், ஸ்டார் பிளடி பெக்கர்' ஆகிய திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிகொண்டுவந்த நடிகர் கவினும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்தச் சந்திப்பைத் தன் வாழ்நாளின் ஆகச்சிறந்த தருணம் என்று குறிப்பிட்ட கவின் தனது எக்ஸ் பக்கத்தில், "சில மனிதர்கள் தங்களின் இயல்பான குணத்தாலேயே நமக்குப் பெரும் ஊக்கமளிப்பார்கள். காலம் அவரது பாதையையும் பயணத்தையும் மாற்றியிருக்கலாம், ஆனால் அவரது எளிமை, பணிவு அல்லது கனிவான குணம் ஆகியவை துளிகூட மாறவில்லை. கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக அவரைப் பெரிய திரையில் பார்த்து வளர்ந்த எனக்கு, இன்று அவர் தமிழக முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதைப் பார்ப்பது ஒரு மாபெரும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. என் வாழ்நாளில் நான் என்றும் பொக்கிஷமாகப் போற்றும் தருணம் இது" எனத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a… pic.twitter.com/klEQHb7UFJ

பிஸியாகும் நடிகர்கள்..

நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி இசையமைப்பாளர் தமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகராகக் களமிறங்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபுறம், நடிகர் கவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து, பிரபல எழுத்தாளர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹாய்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.