தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தவர்: சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தவர்: சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
சென்னை: தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா என்று கூறி அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களை சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அமைச்சர் ராஜ்மோகன்: பத்மஸ்ரீ, முனைவர், பேராசிரியர், பட்டிமன்ற பிதாமகர் சாலமன் பாப்பையா மறைவு தமிழ்கூறும் நல்லுகிற்கே மாபெரும் இழப்பாகும். கல்லூரியில் பயிற்றுவித்த தமிழை, பட்டிமன்றங்கள் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் கொண்டு புகழின் உச்சிக்கு உயர்த்திய மாண்புடையவர்.
நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜ தலைவர்): தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் சாலமன் பாப்பையா. எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த அவரது இழப்பு, தமிழ் உலகிற்கே பேரிழப்பாகும்.
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்): சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் ஆழமான, அறிவுப்பூர்வமான அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவரது இழப்பு தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.
பிரேமலதா (தேமுதிக): சாலமன் பாப்பையா தனித்துவமான பேச்சாற்றலாலும், நகைச்சுவை கலந்த தமிழ் நடையாலும், பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும் தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலைத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு நன்கறிந்த பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா நகைச்சுவை ததும்பும் எளிய சொற்பொழிவால், வாதத் திறமையால், இனிய குரல் வளத்தால் தலைமுறைகளைத் தாண்டி அனைத்து பிரிவு மக்களையும் கவர்ந்தவர். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சாலமன் பாப்பையா தனது தமிழ்ப் புலமையாலும், நகைச்சுவையினாலும் தமிழ்ப் பட்டிமன்றத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்தவர். தனது இளம் வயதில் இளமாறன் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பேசியவர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அன்புமணி (பாமக): தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுக மானவர்.
டிடிவி.தினகரன் (அமமுக): சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துகளால் பட்டிமன்றங்களை சிறப்பித்தவர்.
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழ் இலக்கியத்தை எளிய நடையில் மக்களிடம் கொண்டு சேர்த்த பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வருத்தத்துக்குரியது.
இதுபோல, ஜவாஹிருல்லா (மமக), ஜெயக்குமார் செல்லையா (ஐக்கிய ஜனதா தளம்) உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* கலைஞரால் நேசிக்கப்பட்டவர் - உதயநிதி
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன். கலைஞரால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர். தனது நகைச்சுவை கலந்த கருத்தாழமிக்க பேச்சினால், கடைக்கோடி மக்களிடமும் பட்டிமன்றங்களை கொண்டு சேர்த்தவர். ஏராளமான அடுத்த தலைமுறை தமிழ் பேச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். அவரின் பட்டிமன்றங்கள் இல்லாத விழாக்காலங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களின் அன்பை பெற்றவர். அவரின் மறைவு, பேச்சு உலகிற்கும், பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு. அவரின் பணிகள் என்றென்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.