தலைமை செயலகம் கட்ட நிர்வாக குழு ஒப்புதலின்றி நிலம் ஒப்படைப்பு: வீட்டு வசதி வாரியத்தில் சர்ச்சை
சென்னை: சென்னை, பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட, வீட்டு வசதி வாரிய நிலத்தை, வாரிய நிர்வாகக் குழு கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறாமல், வேறு துறைக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலக திட்டத்துக்கு நிலம் வழங்கிய விஷயத்தில், சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பட்டினப்பாக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக, பொது மக்களிடம் இருந்து, வீட்டுவசதி வாரியம், இந்த நிலத்தை 1958ல் கையகப்படுத்தியது.
வீட்டுவசதி வாரிய சட்ட விதிகளின்படி, வாரிய நிலங்களை ஒதுக்கீடு செய்வது, வேறு துறைகள் பயன்படுத்த அனுமதிப்பது, விற்பனை செய்வது போன்ற விஷயங்களில், வாரிய நிர்வாகக் குழு கூட்டத்தில் மட்டுமே முடிவு எடுக்க முடியும்.
வாரிய நிர்வாக இயக்குநர் உட்பட உயரதிகாரிகள், தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது. அதை மீறி, மக்கள் குடியிருப்புக்காக எடுக்கப்பட்ட நிலங்கள், தற்போது வணிக பயன்பாட்டுக்காக வகைப்பாடு மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை, அரசு ஒரு பொது நோக்கத்துக்காக பயன்படுத்த நினைத்தால், அது தொடர்பான கடிதத்தை உரிய துறையிடம் இருந்து பெற வேண்டும். அதன் அடிப்படையில், வாரிய நிர்வாகக் குழு கூட்டத்தில், வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப் பட வேண்டும்.
வாரிய கூட்டத்தில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே, சம்பந்தப்பட்ட நிலத்தை வேறு துறை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஆனால், பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்தில், இந்த நடைமுறைகள் பின்பற்றப் படவில்லை. அரசின் அழுத்தம் காரணமாக, வாரிய நிர்வாக இயக்குநர் நிலத்தை வழங்கி உள்ளார். இது சட்ட ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.