📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 28, 2026 04:03 PM

தெமாசெக் மற்றும் எஃப்எஸ்ஐ: இத்தாலிய முதலீட்டு பங்காளித்துவம்

தெமாசெக் மற்றும் எஃப்எஸ்ஐ: இத்தாலிய முதலீட்டு பங்காளித்துவம்

சிங்கப்பூரின் அனைத்துலக முதலீட்டு நிறுவனமான தெமாசெக், இத்தாலியின் வளர்ச்சிப் பங்கு முதலீட்டாளரான எஃப்எஸ்ஐ நிறுவனத்துடன் ஒரு உத்திபூர்வ பங்காளித்துவத்தை அமைப்பதன் மூலம் இத்தாலியில் தனது வாய்ப்புகளை விரிவுபடுத்தவிருக்கிறது.

எஃப்எஸ்ஐ என்பது ஐரோப்பாவில் ஒரே ஒரு நாட்டிற்காக மட்டும் தனித்துவமாக இயங்கும் மிகப்பெரிய நிதி.

திங்கட்கிழமை (செப்டம்பர் 28), எஃப்எஸ்ஐ நிறுவனத்தின் மேலாண்மை நிறுவனத்தில் 9 விழுக்காட்டு உத்திபூர்வ சிறுபான்மை பங்கை வாங்கியுள்ளதாகத் தெரிவித்தது.

மேலும், எஃப்எஸ்ஐயின் எதிர்கால நிதிகளுக்குத் தேவையான கூடுதல் மூலதனத்தையும் தெமாசெக் வழங்கும் என்று கூறியது.

எஃப்எஸ்ஐ நிறுவனத்தின் குழுவால் கிட்டத்தட்ட 5 பில்லியன் யூரோ அதாவது $7.28 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி மதிப்பிலான நிதிகள் நிர்வகிக்கப்படுகின்றன.

அந்தப் புதிய பங்காளித்துவம், பத்தாண்டுக்கும் மேலாக முதலீடு செய்து வரும் இத்தாலியில் தெமாசெக்கின் இருப்பை மேலும் வலுப்படுத்தும்.

எர்மெனெகில்டோ செக்னா குழுமம், கோல்டன் கூஸ், மொன்கிலியர் உள்ளிட்ட ஆடம்பர சில்லறை விற்பனை நிறுவனங்களில் தெமாசெக் நேரடி, மறைமுகப் பங்குகளைக் கொண்டுள்ளது.

மேலும், எஃப்எஸ்ஐ நிறுவனத்தின் முந்தைய நிதிகளில் தெமாசெக் ஒரு முக்கிய முதலீட்டாளராக இருந்திருப்பதுடன் இத்தாலியின் அதிவேக வளர்ச்சி காணும் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் கவனம் செலுத்தும் அதன் ‘ஸ்கேல்-அப் கேபிட்டல் சொல்யூஷன்ஸ்’ நிதியிலும் முதலீட்டாளராக உள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தெமாசெக், எஃப்எஸ்ஐ நிறுவனத்துக்கு இடையிலான புதிய உத்திபூர்வ பங்காளித்துவம், இத்தாலியின் நடுத்தர சந்தையில் சிங்கப்பூர் நிறுவனத்தின் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெமாசெக் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் நடுத்தர சந்தை அந்நாட்டின் தேசியப் பொருளியலின் முதுகெலும்பாக விளங்குகிறது.

அது 70 மில்லியன் யூரோ முதல் 200 மில்லியன் யூரோ வரையிலான வருவாயையும் வட்டி, வரி, தேய்மானம், கடனடைப்புக்கு முந்தைய வருவாயாக 10 மில்லியன் யூரோ முதல் 30 மில்லியன் யூரோ வரையிலான வருமானத்தையும் கொண்ட வணிகங்களைக் குறிக்கிறது.