📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 05, 2026 04:00 AM

தாய்மொழி ஊடகங்களின் பங்கு முக்கியம்: எஸ்பிஎச் மீடியா தலைவர் சான் யெங் கிட்

தாய்மொழி ஊடகங்களின் பங்கு முக்கியம்: எஸ்பிஎச் மீடியா தலைவர் சான் யெங் கிட்

தேசிய செய்தி நிறுவனமான எஸ்பிஎச் மீடியா, ஆங்கில நிறுவனமோ சீன நிறுவனமோ அல்ல, தமிழ் முரசு உட்பட ஒவ்வொரு தாய்மொழி ஊடகத்தின் பங்கும் முக்கியமானது என்று கூறியுள்ளார் எஸ்பிஎச் மீடியாவின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு சான் யெங் கிட்.

‘சிங்கப்பூர்’, ‘தேசிய’ போன்ற சொற்களுடன் இணைத்துப் பார்க்கப்படும் இந்நிறுவனம் சமூகங்களிடமிருந்து விலகி இருக்கமுடியாது என்றும் ஆங்கிலம் அலுவல் மொழியாக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, நான்கு அதிகாரத்துவ மொழிகளும் முக்கியம் என்றும் உறுதியளித்தார் திரு சான்.

எஸ்பிஎச் மீடியாவின் தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் கோ பூன் வான் ஓய்வுப்பெற்றதைத் தொடர்ந்து புதிய நிர்வாகத் தலைவர் என்ற பொறுப்பை திரு சான் இம்மாதம் 1ஆம் தேதி முதல் ஏற்றார். அதனையொட்டி நிறுவனத்தின் செய்தியாளர்களுடன் நேர்காணலை நடத்தினார்.

தமது உத்திபூர்வத் திட்டங்கள், நோக்கங்கள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் போன்ற அம்சங்கள் பேசப்பட்டன. அந்த நேர்காணலில் தாய்மொழி ஊடகங்கள் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதுடன் மொழிப் பணியையும் ஆற்றும் பொறுப்பைக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான ஆதரவைக் கணக்கிடும் முறையில் வேறுபாடு இருக்குமா என்று தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

தேசிய நிறுவனமாக இருப்பதால் தாய்மொழி ஊடகங்களுக்கு வளங்கள் வழங்காத ஒரு காலம் என்றும் இருக்காது என்ற அவர், விகிதாசார அடிப்படையில் தாய்மொழி ஊடகங்களுக்கு அதிக வளங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என்றும் சொன்னார். எந்தெந்த அம்சங்களில் இன்னும் அதிக தேவை இருக்கிறதோ அவற்றுக்கு வழங்க முயற்சி செய்வதாகவும் நம்பிக்கையளித்தார்.

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் எனும் தாய்நிறுவனத்திலிருந்து ஊடகப் பிரிவு பிரிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டு எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட், எஸ்பிஎச் மீடியா ஹோல்டிங்ஸ் எனும் லாபநோக்கற்ற நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர், எஸ்பிஎச் மீடியாவின் செய்தித்துறை உபகாரச் சம்பளம், தமிழ் முரசு செய்தியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதுவரையில் மூவர் அந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து தமிழ் ஊடக உபகாரச் சம்பளம் அமைக்கப்பட்டு இவ்வாண்டு அத்திட்டத்தின் முதல் உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தாய்மொழிகளை ஊக்குவிக்கும் பொறுப்பு எஸ்பிஎச் மீடியா நிறுவனத்திற்கு மட்டுமே இல்லை. சமூகம், பள்ளிகள், கல்வி அமைச்சு போன்ற அங்கங்களுடன் இணைந்து ஒட்டுமொத்த சமூகமாக அப்பணியை மேற்கொள்ளவேண்டும் என்றார் அவர். தமிழ் முரசு, தமிழ் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டதை திரு சான் நினைவுகூர்ந்தார். எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் அனைத்து தாய்மொழி ஊடகங்களும் தொடர்ந்து மொழி வளர்ச்சிக்குப் பங்களிப்பதை உறுதிசெய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அதே வேளையில், நோக்கத்திலிருந்து தடம் புரளாமல் இருக்க தாய்மொழி ஊடகங்கள் அவற்றின் வாசகர்களை நன்கு அறிந்திருக்கவேண்டும் என்று திரு சான் அறிவுறுத்தினார்.

நிறுவனத்தின் சீன, மலாய், தமிழ் ஊடகங்கள் வெளிநாடுகளில் வளர்ச்சியடையும் ஆற்றல் உண்டு என்றார் திரு சான். தமிழ் முரசு இணையத்தில் வெளியிடும் செய்திகளை இந்தியாவில் பலர் படிப்பதை மேற்கோள்காட்டிய திரு சான், மின்னிலக்கத் தளத்தை விளம்பரப்படுத்தாமல் நியாயமான முறையில் வாசகர்களைப் பெற்றுள்ள நிலையில் மேலும் அதிகளவு வளர்ச்சியைக் காண முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். அதற்கு முன்னர், உள்நாட்டு வாசகர்களிடம் வலுவாக நங்கூரமிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.