“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு மதுரை தேர்வானது எப்படி?”
அமைச்சர் அருண்ராஜ்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழக அரசு சார்பில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர்கள் அருண் ராஜ், சட்டத்துறை அமைச்சர்நிர்மல் குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாத், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்எல்ஏ-க்கள் கார்த்திகேயன், கல்லாணை, கருப்பையா உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 499 மோதிரங்கள் கொள்முதல் செய்து தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 மோதிரங்கள் கொள்முதல் செய்வதற்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
தாய்மையை கொண்டாடுவது, அரசு மருத்துவச் சேவைகளில் மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவது, அரசு மருத்துவமனையை நம்பகமான பாதுகாப்பு மையமாக முன்நிறுத்துவது, அரசு மருத்துவமனை பிரசவங்களுக்கு மாண்பும், பெருமையும் சேர்ப்பது, தரமான தாய் - சேய் மருத்துவ சேவையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் சமமாக கிடைக்கச் செய்வது போன்ற ஐந்து நோக்கங்கள் இதில் உள்ளன.
ஆண்டுக்கு 7.8 லட்சம் பிரசவங்கள் தமிழகத்தில் நடக்கின்றன. இதில், 4.2 லட்சம் பிரசவங்கள், அதாவது 53 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. இதுவே 10 ஆண்டுக்கு முன் 2017, 2018-ம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் 62% ஆக இருந்தது. பல்வேறு மகப்பேறு சேவைகளை கட்டணமில்லாமல் வழங்கியும் அதன்பிறகு பிரசவங்கள் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் குறைந்துள்ளது. தமிழக அரசின் தாய்மாமன் திட்டத்தின் பின்னால் ஆழமான வலுமான பொருளாதார கோட்பாடு உள்ளது.
2025-ம் ஆண்டு 1.4 லட்சம் மக்களிடம் தேசிய அளவில் நடத்திய ஆய்வு முடிவுகள் படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனையி்ல் ஒரு பிரசவத்திற்கும் ஒரு குடும்பம் ரூ.1,412 செலவிடுவதாகவும். அதுவே தனியார் மருத்துவமனையில் ஒரு குடும்பம் ரூ.69,914 செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் தமிழக குடும்பங்கள் 50 மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது.
ஒரு சாதாரண தொழிலாளியின் பல மாத வருமானம், கடன், நகை அடமானம் போன்றவை மூலம் இந்த பிரசவ செலவை சந்திக்கிறது. தங்க மோதிரத்திற்காக பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அல்ல அரசின் நோக்கம். தரமான மருத்துவ சேவை கிடைக்கச் செய்து, மருத்துவமனை சேவைகளை பயன்படுத்தச் செய்வதே அரசின் நோக்கம்” என்றார்.
தொடர்ந்து முதல்வர் விஜய், பட்டு வேட்டி சட்டை அணிந்து ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் 3 மதங்களைச் சேர்ந்த தாய்மார்களை குழந்தைகளுடன் தன்னுடன் மேடையில் அமர வைத்து அந்தக் குழந்தைகளுக்கு மோதிரத்தை முதல்வர் அணிவித்தார். தொடக்க விழாவில் மொத்தம் 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் அன்போடும், பரிவுடனும் அணிவித்தார். அப்போது சில குழந்தைகளை கையில் தூக்கிக் கொஞ்சியது, தாய்மார்கள் மத்தியி்ல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.