📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 29, 2026 06:03 AM

இடைத்தேர்தலில் திண்ணை பிரசாரம்: தி.மு.க., மகளிர் அணிக்கு உத்தரவு

இடைத்தேர்தலில் திண்ணை பிரசாரம்: தி.மு.க., மகளிர் அணிக்கு உத்தரவு

- நமது நிருபர் -

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், திண்ணை பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு, தி.மு.க., மகளிரணியினருக்கு, கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழி உத்தரவிட்டுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற வேண்டுமென, கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டம், தாராபுரத்தில் நடந்தது. அதில் பேசிய கனிமொழி, வீடுவீடாக சென்று, திண்ணை பிரசாரம் செய்யுமாறு மகளிர் அணியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் கூறியதாவது: த.வெ.க., ஆட்சியில், கடந்த நான்கு மாதங்களில் 200க்கும் மேல் கொலைகள்; 300க்கும் மேல் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன. இந்த விபரங்களை, பெண் வாக்காளர்களிடம் எடுத்து கூறி, பிரசாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை தெரியப்படுத்துவதோடு, 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அமைத்த பின்னும், குற்றங்கள் தொடர்வதை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும், மின்வெட்டு ஏற்படும் பகுதிகளில் திண்ணை பிரசாரம் செய்து, 'தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டதா' என மக்களிடம் கேட்க வேண்டும் என, கனிமொழி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இரு தொகுதிகளிலும், மகளிரணியினர் பிரசாரம் செய்வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.