📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 12, 2026 11:30 AM

தாம்பரம்

தாம்பரம்

தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு, பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என, பெயர் சூட்ட, தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவரது வீடு, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரத்தில் உள்ளது. அந்த வீட்டில், மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு, இந்திய ராணுவத்தின் உயரிய விருதான 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது நினைவை போற்றும் விதமாக, கிழக்கு தாம்பரத்தில், ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை செல்லும், தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்று பெயரிட, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய பரிந்துரை குறிப்புடன் அனுப்பி வைக்குமாறு, நகராட்சி நிர்வாக இயக்குநர் சார்பில், கடந்த 2025, ஆக., 26ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023, பிரிவு 186ன் படி, சாலையின் பெயரை மாற்றம் செய்ய, மாமன்றத்தில் பொருள் வைத்து ஒப்புதல் பெறுவதற்கு, உரிய அனுமதி வழங்க கோரி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு 2025, செப்., 19ம் தேதி, மாநகராட்சி மூலம் அனுமதி கோரப்பட்டது.

அதை தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றி, அறிக்கை அனுப்புமாறு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலரிடம் இருந்து, 2025 அக்., 23ம் தேதி கடிதம் வந்தது. இதையடுத்து, தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு, மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயர் சூட்ட, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.