டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா, இண்டியா கூட்டணி கட்சியினர் கைது
புதுடெல்லி: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள், தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆகாசவாணி வளாகத்துக்குள் இண்டியா கூட்டணி கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் தரப்பு தலைமை தேர்தல் ஞானேஷ் குமாரை சந்திக்க வேண்டுமென விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், அந்த சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து தங்களது போராட்டம் தொடரும் என ராகுல் தெரிவித்தார். மேலும், ஆகாசவாணி வளாகத்துக்குள் போராடுவது போலீஸாருக்கு சிக்கல் என்றால் வேறு இடத்தில் போராட அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அது பலன் தரவில்லை. இந்நிலையில், சுமார் 8 மணி அளவில் ஆகாசவாணி வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி-க்கள் மற்றும் இண்டியா கூட்டணி கட்சியினரை வெளியேற்றினர். அதற்கு ராகுல் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வேனில் ஏற்றினர். அவருடன் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியும் இருந்தார்.
மற்றொரு வாகனத்தில் மற்ற கட்சிகளின் எம்.பி-க்கள் மற்றும் தலைவர்கள் ஏற்றப்பட்டனர். கே.சி.வேணுகோபால், அம்ரிந்தர் சிங், பவன் கெரா, தீபேந்தர் ஹூடா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க 300-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் விரும்புவதாகவும், ஆனால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் எம்பிக்களை தேர்தல் ஆணையம் சந்திக்கவில்லை என்றால், ஜனநாயகத்துக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி வலக வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று பேரணியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி புறப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை முன்னிட்டு, தேர்தல் ஆணைய அலுவலகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டதோடு, ஏராளமான தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தடுக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலக பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த ஆகாசவாணி வளாகத்தில் ராகுல் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த சந்திப்பு தொடர்பாக தங்களை எந்த கட்சியும் தொடர்பு கொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.