டெலிகிராம் குற்றக்குழு: சிங்கப்பூரில் இருவர் கைது
சிறார் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பதிவுகளை வைத்திருந்ததற்காகவும் அவற்றை நாடிய குற்றத்துக்கும் சிங்கப்பூரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இத்தாலியில் அத்தகைய குற்றங்களை உலக அளவில் புரிந்த கும்பல் அங்கு முறியடிக்கப்பட்டதும் சிங்கப்பூரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரங்களை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) காவல்துறை வெளியிட்டது.
கடந்த வியாழக்கிழமை தலைநகர் ரோமில் இத்தாலியக் காவல்துறை, அந்நாட்டில் சிறார் பாலியல் குற்றக்கும்பலைச் சேர்ந்த 17 நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. அக்கும்பலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் சிங்கப்பூரிலும் இருவர் கைதாயினர். அந்த ஆடவரில் ஒருவருக்கு 27 வயது, மற்றொருவருக்கு 33 வயது என்று தெரிகிறது.
டெலிகிராம் சமூக ஊடகத்தில் இயங்கிய பன்னாட்டு குற்றக்கும்பல் குறித்து இத்தாலிய அதிகாரிகள் பகிர்ந்துகொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் கைதான அந்த இருவருக்கும் இடையில் இருந்த தொடர்பும் அவர்களின் சொந்த நாடுகள் குறித்தும் காவல்துறை எவ்வித விவரத்தையும் தரவில்லை.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அளித்த உளவு விவரங்களைப் பயன்படுத்தி, ‘ஃபிளை டிராப்’ என்ற பெயரிடப்பட்ட குற்றச்செயலுக்கு எதிரான செயல்திட்டத்தை இத்தாலிய காவல்துறை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக ‘நியூ சாகா’ என்ற டெலிகிராம் உரையாடல் குழுவுக்குள் உளவுத்துறை அதிகாரி ஊடுருவி அதன் இணை நிர்வாகியாகச் செயல்பட்டார். அதன்வழியாக உறுப்பினர்களின் தனிப்பட்ட ஒலிபரப்பு வலைத்தளங்களை அவர் கண்டறிந்தார்.
அந்த குற்றக்கும்பலின் வலைத்தளத்தை நான்கு இத்தாலியர்கள், ஒரு சுவிட்சர்லாந்து நாட்டவர் இணைந்து நிர்வகித்தனர். அதன் உறுப்பினர்கள் ‘கிரிப்டோகரன்சி’ முறையில் மின்னியல் கட்டணங்களைச் செலுத்திவந்தனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இத்தாலியக் காவல்துறை 34,000 புகைப்படங்கள், 22,000 வீடியோ பதிவுகள் என மொத்தம் 282.9 ‘கிகாபைய்ட்’ அளவு முறையற்ற பதிவுகளை கும்பலிடம் இருந்து கைப்பற்றினர் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் சிறார்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தல், பாலியல் பதிவுகளை வைத்திருத்தல், அவற்றை நாடுதல் ஆகிய குற்றங்களைப் புரிவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகள் விதிக்கப்படும்.