ரேஷன் ஊழியர்கள் இன்று கடையடைப்பு
கோப்புப் படம்
சென்னை: தமிழகம் முழுவதும் அக்.14-ம் தேதி (இன்று) நடைபெறவிருந்த ரேஷன் கடை பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக, ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.தினேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலைக்கு தரமற்ற வெங்காயம் அனுப்பப்பட்டதாக மதுரவாயல் கடையின் விற்பனையாளர் யுவராணி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும், தற்காலிகப் பணி நீக்க ஆணை ரத்து செய்யப்படவில்லை.
எனவே, கூட்டுறவுத் துறையின் செயல்பாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் அக்.14-ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்று, தற்காலிகப் பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்த உள்ளோம்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட பணியிடை நீக்கம் ரத்து ஆணையில், “தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட கே.யுவராணி விற்பனையாளரை பண்டகசாலையின் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு தற்காலிக பணிநீக்கத்தில் இருந்து மீண்டும் பணியமர்த்தம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. வேலப்பன்சாவடி நியாய விலைக் கடையில் அவர் பணியமர்த்தப் படுகிறார்.
இச்செயல்முறை ஆணை உடன் அமலுக்கு வருகிறது. இவர் புதிய பணியில் சேர்ந்து, பணிசேர் அறிக்கை மற்றும் பொறுப்பு ஏற்பு பட்டியலை உடன் தலைமை அலுவலகம் அனுப்பி வைக்க பணிக்கப்படுகிறார். மேலும், பணியாளர் பணியில் சேராமல் விடுப்பு விண்ணப்பம் சமர்ப்பித்தால் ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.